உடல் நலம் காப்பது என்பது மிக முக்கியம்.
என்றாலும் நமது கவனத்தையும் மீறி, நோய்கள் நம்மைத் தாக்குவது என்பது மனித வாழ்வில் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே!
பலமுறை இப்பகுதியில் உடல் நலப் பாதுகாப்புப்பற்றி எழுதும் போதெல்லாம் ஒன்றைத் தவறாது குறிப்பிடுவது வாசகர்கள் சிலருக்காவது நினைவில் இருக்கக்கூடும்.
‘Health’ – ‘உடல்நலம்’ என்பது நோய் வந்த பிறகு சிகிச்சை என்பதைவிட நோய் வராமல் தடுக்க – தடுப்பரணாக Physical Immunity – நோய் தடுப்பாற்றல் வளர்த்துக் கொள்ள உடல் உறுப்புகளை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவைமூலம் காத்து – வளர்த்துக் கொள்ள அனைவரும் கண்ணுங் கருத்துமாய் இருக்க வேண்டும்.
‘Metabolic Health’ என்ற உறுப்புகளை சரி வர பராமரித்து, பாதுகாத்து அதற்கேற்ப தக்க பயிற்சிகளையும் தாண்டினாலும் –திடீர் தாக்குதல்கள் நடத்தும் பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், கோவிட் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் இவை ஏற்படத்தான் செய்கின்றன.
நாமும் வேறு வழியின்றி அவற்றை எதிர் கொண்டு மீள வேண்டியுள்ளது. அதற்குத்தக்க நிதிச் சேமிப்பு அவசியம் அல்லவா?
அதற்காக நமது வாசக நேயர்கள், அன்பர்கள், நண்பர்கள் தவறாது ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடுக்கு தக்க ஆலோசனைகளைப் பெற்று, சரியான அமைப்பை உறுதி செய்து கொண்டு வாழும் வாழ்க்கை முறைக்கு நாம் பக்குவப்பட வேண்டும்!
சிலர் போலித்தன பெருமையாக
‘எனக்கு நோயே வராது’
‘என்னைக் கண்டால் நோய் பறந்து போய்விடும்’.
‘நான் இதுவரை எந்த மருந்தும் சாப்பிட்டதே கிடையாது’
‘மருத்துவமனைகளுக்கே போனது இல்லை’
என்றெல்லாம் பேசுவது, நடைமுறை யதார்த்தத்திற்கு உகந்ததேயல்ல.
எவருக்கும் நோய் வரக் கூடும். வராமல் இருந்து வாழ்ந்தால் அவரைவிட நமது பாராட்டுக்குரியவர் வேறு எவருமிலர் என்பது உண்மை. என்றாலும், திடீரென சுனாமி போல நோய் நம்மை தாக்கும்போது தகுந்த சிகிச்சைக்கு மருத்துவ ‘பில்’ எப்படிக் கட்டுவது?
அதற்காகவே மருத்துவஇன்ஷுரன்ஸ் எல்லாத் தோழர்களும் ஏற்படுத்திக்கொண்டால் அது பெரிதும் உதவக் கூடும்.
சாதாரணமாக 80 வயது வரை மருத்துவக் காப்பீடு செய்ய வாய்ப்பு இருக்கக் கூடும்.
Dependant – குடும்பச் சார்பு என்ற வகையில் கூட்டுக் குடும்பமாக ‘மகன் அல்லது மகளின் காப்பீட்டோடு – 85 வயது முதியவர்களுக்கும், குறிப்பாக பெற்றோர்களுக்கும்கூட இந்த வாய்ப்பு – மருத்துவக் காப்பீடு உள்ளடக்கமாகும் வசதியிருக்கக் கூடும்.
அவசியம் மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு முதலியவற்றை நல்ல நம்பிக்கையும், நாணயமும் உடைய கம்பெனிகளைத் தேர்வு செய்து, தக்கவரிடம் ஆலோசனை கேட்டு – பயனுறுதல் மிகவும் முக்கியம்.
நடைமுறை யதார்த்தத்தினையொட்டி, அனுபவம் வாய்ந்த மருத்துவ அறிஞர்களிடம் கலந்தாலோசித்து, அவர்களதுஅறிவுரை பெற்று அதில் உங்களை இணைத்துக்கொள்ள செலவு பார்க்காதீர்கள்!
