அன்றைய பம்பாய் நகரின் கழக முன்னணிப் பொறுப்பாளர்கள் வேண்டுகோளை ஏற்று பம்பாய் சென்று, அங்கு முகம்மது அலிஜின்னா – பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோருடன் தந்தை பெரியார் சந்தித்துக் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற வாய்ப்பாக, பெரியார் பம்பாய் நகருக்கு 5.1.1940 அன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டார். மறுநாள் காலை 10 மணிக்கு பம்பாய் தாதர் ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பை வந்தடைந்தார்.
7.1.1940 அன்று நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்துகொண்ட பெரியார் இரவு 9.30 மணிக்கு அம்பேத்கர் அவர்களுடன் அவரது மாளிகையில் சந்தித்தார் – 10.30 மணி வரை அச்சந்திப்பு நடைபெற்றது.
8.1.1940 அன்று மாலை 5.30 முதல் 8.30 மணிவரை வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரியார் – ஜின்னா – அம்பேத்கர் ஆகிய மூவரின் சந்திப்பு நடைபெற்றது.
மூன்று தலைவர்களும் மூன்று மணிநேரம் நடத்திய அந்த சந்திப்பு மூவர் வரலாற்றிலும் ஒரு மிக முக்கியமான சந்திப்பு என்றால் அது மிகையில்லை. இச்சந்திப்பில் ‘அன்றைய காங்கிரஸ்’ கட்சியின் ஏதேச்சதிகாரப் போக்கு – ஆட்சியின் கொடுமை என பலவற்றைக் குறித்து மூவரும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
தந்தை பெரியார் அவர்கள் மீண்டும் ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை தொடங்க உள்ளதை கூறியபோது, இருவரும் ஆதரவு அளித்தனர். ஜின்னா அவர்கள் இதுகுறித்து பேசும்போது ‘‘நீங்கள் என் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள்’’ என்று கூறினார்.
1938–1939ஆம் ஆண்டில் இராஜகோபாலாச்சாரியார் சென்னை மாகாணத்தின் பிரதம அமைச்சராக இருந்த போது கட்டாய ஹிந்தியை பள்ளிகளில் புகுத்தினார். இந்த இந்தி திணிப்பு என்பது சமஸ்கிருதத்தைப் புகுத்துவதற்காகவே முதலில் ஹிந்தித் திணிக்கும் நடவடிக்கை என்றும் விளக்கமாக ஆச்சாரியார் எடுத்துரைத்தார்.
தந்தை பெரியார் வெகுண்டெழுந்தார். கட்டாய ஹிந்தியை எதிர்த்து களம் கண்டார். நாடெங்கும் எதிர்ப்புப்போர் தீ எனப் பரவி எரிந்தது. ஆச்சாரியார் பணிந்தார். தந்தை பெரியார் வென்றார். பள்ளி அறைக்குள் திணிக்கப்பட்ட கட்டாய ஹிந்திக்கு கொள்ளி வைக்கப்பட்டது. தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்தது.
போராட்டம் வெற்றியடைந்ததை அறிந்து, அய்யாவை பாராட்டி அன்றைய அகில இந்திய முஸ்லீம் தலைவரான முகம்மது அலி ஜின்னா புதுடில்லியிருந்து 26.2.1940இல் தந்தை பெரியாரைப் பாராட்டி தந்தி ஒன்றைக் கொடுத்தார்.
தந்தி செய்தி: “Your Magnificiant stand Sacrfices for people; at last Secured Justice – my congratulations”
‘தங்களுடைய மகத்தான உறுதியும், தாங்கள் பெது மக்களுக்குச் செய்த தன்னலமற்ற தியாகங்களும் கடைசியில் நீதியை வாங்கிக் கொடுத்து விட்டன. கட்டாய ஹிந்தி நீக்கப்பட்டமைக்கு தங்களுக்கு எனது பாராட்டுதல்கள்’’ என்றார் எம்.ஏ. ஜின்னா.
அன்று பாராட்டிய ஜின்னா தந்தை பெரியார் பம்பாய் சந்திப்பில், ஹிந்தி எதிர்ப்புப் போரை மீண்டும் தொடங்க இருப்பதை அறிந்து மகிழ்ந்து ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபா சாகேப் டாக்டர் அண்ணல் அம்பேத்கரும் தனது ஆதரவை தெரிவித்தார். இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு இரு விஷயத்திலும் தந்தை பெரியார் கருத்துகளோடு இருவரும் ஒத்தக் கருத்துள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை இச்சந்திப்பின் மூலம் தெரிகிறது.
தந்தை பெரியாருடன் பம்பாய் பயணத்தில் 5 பேர்கள் கலந்து கொண்டனர். அந்த அய்வரில் ஒருவரான அண்ணா, தந்தை பெரியாரின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
இந்நாளில், அந்நாளில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பில் தந்தை பெரியார் கலந்துகொண்ட நிகழ்வோடு அண்மையில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் ஜனவரி 3, 4 ஆகிய இரு நாட்கள் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்ட மும்பை நிகழ்ச்சியும் ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியத்துவம் நிறைந்ததாகும்.
அன்று தந்தை பெரியார் 1940 காலங்களில் பம்பாய் சென்று சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை பதிவு செய்திட – அவைகளை செயலாக்கிட திட்டமிட சந்திப்பும் – பிரச்சாரக் கூட்டங்களும் நடந்தது.
அதேபோல தற்போது, தந்தை பெரியார் பணிமுடிக்க அணி வகுக்கும் கரும்படையின் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுயமரியாதைஇயக்க கொள்கைகள் செயலாக்கம் பெற்று சட்டமாக்கப் பயன்படும் நூற்றாண்டு விழாவிற்கான பயணம் – பெரியார் அன்று சிந்தனை விதைக்கச் சென்றார் – அச்சிந்தனைகள் வெற்றி பெற்று நூற்றாண்டு கொண்டாடும் விழா மாநாட்டில் கலந்து கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கொள்கை சங்கநாதம் செய்து மும்பை சாதனைப் பயணம் சென்று வந்துள்ளார் என்பது மறக்க முடியாத ஒன்றாகும்.
