சென்னை, ஜன. 8- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ‘திறன் தமிழ்நாடு 2025’ போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (7.1.2026) நடைபெற்றது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதன்படி, 63 திறன் பிரிவுகளின் கீழ் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த 70 மாணவர்களுக்குத் தலா ரூ.25 ஆயிரமும், இரண்டாமிடம் பிடித்த 69 மாணவர்களுக்குத் தலா ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.24.40 லட்சத்திற்கான காசோலைகளையும், 2025-2026ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,194 மாணவர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.
மேலும், ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுப் பிரிவின் கீழ் பயிற்சி பெற்று வங்கி, ரயில்வே மற்றும் பணியாளர் தேர்வு வாரியத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 80 மாணவர்களில், 16 வெற்றியாளர்களுக்குப் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, ‘இந்தியா திறன் 2026’ போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வந்துள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முன்னதாக மாணவர்களின் அறிவியல் தொழில்நுட்பப் படைப்புகள் இடம்பெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட துணை முதலமைச்சர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைச் செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
