சென்னை, ஜன. 8- பள்ளி மாணவர் களிடையே அறிவியல் ஆர்வத்தையும், படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் ‘இன்ஸ்பயர் – மானக்’ விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுகளில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று (7.1.2026) தொடங்கியது.
தேசியப் போட்டிக்குத் தகுதி: மாநில அளவில் சிறப்பாகச் செயல்பட்ட 20 மாணவ-மாணவிகள் டில்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கண்காட்சிப் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்தப் பட்டறையில், பல்வேறு துறை வல்லுநர்கள் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த ஆலோ சனைகளை வழங்கினர்.
பரிசுகள் மற்றும் வாய்ப்புகள்:
தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
சிறந்த 60 கண்டுபிடிப்பாளர்கள் ஜப்பான் நாட்டுத் தொழில்நுட்ப நிறு வனங்களைப் பார்வையிட அழைத்துச் செல்லப்படுவார்கள்.
திட்டத்தின் வளர்ச்சி:
2009 முதல் நடைமுறையில் உள்ள இத்திட்டம், 2018 முதல் ‘மானக்’ விருது என மறுசீரமைக்கப்பட்டது. தற்போது மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதிரி உருவாக்கத்திற்காக தலா ரூ. 10,000 நேரடியாக வழங்கப்படுகிறது.
கடந்த இரண்டு கல்வியாண்டுகளில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலிருந்து மொத்தம் 2,188 மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு நிதியுதவி பெற்றுள்ளனர். இந்திய அளவில் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் புதுமையான யோசனைகள் இத்திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் ஒத்துழைப்பு மய்ய இயக்குநர் சண்முக சுந்தரம் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் முதன்முறையாக இத்தகைய பயிற்சி பட்டறையை நடத்துகிறது; மாணவர்களின் படைப்பாற்றல் மிகவும் சிறப்பாக உள்ளது” எனப் பாராட்டினார்.
