காஞ்சிபுரம், ஜன. 8- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய உற்சவர் சிலைகள் செய்ய கொடுத்த தங்கத்தில் ஒரு துளி தங்கம் கூட சேர்க்கப்படவில்லை இந்தத் திருட்டு தொடர்பான வழக்கு, தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடந்த 312 சவரன் தங்கம் முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற விசாரணை தீவிரமடைந்துள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 2015-ஆம் ஆண்டு, ஏகாம்பரநாதர் கோயிலின் தொன்மையான சோமாஸ்கநீதர் மற்றும் ஏலவார்குழலி உற்சவர் சிலைகள் சேதமடைந்ததை அடுத்து, புதிய சிலைகளைச் செய்ய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்காக பக்தர்களிடமிருந்து சுமார் 312 சவரன் தங்கம் நன்கொடையாகப் பெறப்பட்டது. இருப்பினும், செய்யப்பட்ட புதிய சிலைகளில் தங்கம் சேர்க்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது. இது குறித்து அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின் பேரில், 2017-இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அய்.அய்.டி (IIT) குழுவினர் நடத்திய ஆய்வில், புதிய சிலைகளில் துளி தங்கம் கூட சேர்க்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சிவகாஞ்சி காவல் துறையினர் அண்மையில் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டிருந்த போலி ஆவணத் தயாரிப்பு தொடர்பான பிரிவுகள் நீக்கப்பட்டு, தற்போது “கோயில் சிலைகளைத் திருடுதல்” மற்றும் “கூட்டாகச் சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுதல்” ஆகிய கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தினேஷ் என்ற பக்தர் ஆர்.டி.அய் (RTI) மூலம் கேட்ட கேள்விகளுக்குக் கோயில் நிர்வாகம் அளித்துள்ள பதில்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதில்: சிலை செய்தபோது எவ்வித காட்சிப் பதிவு ஆதாரங்களும் எடுக்கப் படவில்லை.
பக்தர்கள் வழங்கிய தங்கத்திற்கு முறையான ரசீதுகள் வழங்கப்படவில்லை. என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.3.12 கோடி மதிப்புள்ள தங்கம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட வீர சண்முகமணி, கவிதா, ஸ்தபதி முத்தையா மற்றும் அர்ச்சகர்கள் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்குக் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
5.1.2026 அன்று நடைபெற்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை பிப்ரவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் பால் விலை உயர்வு என வெளியாகும் செய்தி தவறானது
ஆவின் நிர்வாகம் விளக்கம்
சென்னை, ஜன.8- ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு ஆவின் மூலம் 31 இலட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்பப்படுகிறது. குறிப்பாக சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 15 இலட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் 35 ஆவின் ஜங்ஷன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் மூலம் பொது மக்களுக்கு சமன்படுத்தப் பட்ட பால் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் மற்றும் டிலைட் பால் என அய்ந்து வகை பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும், ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும், தங்கு தடையின்றி ஆவின் பால் அனைத்து பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆவின் பால் விலையேற்றம் என வெளியிடப்படும் செய்தி முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது என தெரிவிக்கப்படுகிறது.
