மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூபாய் நாலரைக் கோடி நிவாரண உதவி அமைச்சர்கள் வழங்கினர்
திருவொற்றியூர், ஏப். 25- மாண்டஸ் புயல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம்தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக காசி மேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 76 விசைப்படகுகள் முழுவதுமாக கடலில் மூழ்கி சேதமடைந்தது. மேலும் 136 விசைப்படகுகள் அருகில் இருந்த படகுகளுடன் ஒன்றுடன் ஒன்று மோதியும், கட்டப்பட்டிருந்த வார்ப்பு பகுதி மீது மோதியும் பலத்த சேதம் அடைந்தன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழு வினர் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கடலோர கிராமங்களில் மாண்டஸ்புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட 124 மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.4.67 கோடி நிவாரண நிதியை வழங்கினர். நிகழ்ச்சியில் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் இளைய அருணா, சட்டமன்ற உறுப்பினர்கள் எபினேசர், அய்ட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள், சுரேஷ், ஜெபதாஸ் பாண்டியன், நிர்வாகிகள் பாண்டி செல்வம், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.