சென்னை, ஜன.7–- இஸ்ரோ தேர்வு பொங்களன்று நடைபெறுவதையொட்டி சு.வெங்கடேசன் எம்.பி., ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யம் (VSSC), தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான (விளம்பர எண்கள்: 331, 332, 335) கணினி வழித் தேர்வை (CBT) வரும் 2026 ஜனவரி 15 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். ஜனவரி 15 என்பது தமிழ்நாட்டின் மிக முக்கியப் திருவிழாவான பொங்கல் திருநாளாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்குப் பின்வரும் காரணங்களால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்:
- போக்குவரத்துத் தட்டுப்பாடு: பொங்கல் திருவிழா காலத்தில் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து மிகக் கடுமையான நெரிசலைக் கொண்டிருக்கும். இதனால் மாணவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மய்யங்களை அடைவது சாத்தியமற்றது.
- கலாச்சார உணர்வு: பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா மட்டுமல்ல, அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். இந்த நாளில் தேர்வு நடத்துவது மாணவர்களின் கலாச்சார உரிமையைப் பறிப்பதாகும்.
- முரண்பாடான நடைமுறை: தமிழ்நாட்டில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மய்யம் (IPRC) பொங்கலுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில், மற்றொரு மய்யமான வி.எஸ்.எஸ்.சி தேர்வை அறிவித்திருப்பது நிர்வாக முரண்பாட்டைக் காட்டுகிறது.
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு தேர்வுத் தேதிகளை அமைப்பது வழக்கம். எனவே, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் மற்றும் நியாயமான கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 15இல் நடைபெறவுள்ள இத்தேர்வை மற்றொரு தேதிக்குத் தள்ளி வைக்க உடனடியாக ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
வனப்பகுதிகளில் மின் வழித்தடம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி
புதுடில்லி, ஜன. 7– வனப்பகுதிகளில் உயர்மின் அழுத்த மின்சார வழித்தடங்கள் அமைப்பதற்காக நிலம் கோரி விண்ணப்பிக்கும் மனுக்களைப் பரிசீலித்து, உரிய முடிவுகளை எடுக்கலாம் என ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின் வழித்தடம்
நாடு முழுவதும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஒன்றிய அரசின் ‘பவர்கிரிட்’ நிறுவனம் மூலம் மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தைக் கொண்டு செல்ல 800 கிலோ வோல்ட் (KV) திறன் கொண்ட உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த வழித்தடங்கள் அமையும் போது குறுக்கிடும் வன நிலங்களைப் பெறுவதில் கடந்த சில ஆண்டுகளாகச் சிக்கல் நீடித்து வந்தது: ஆரம்பத்தில் 800 KV வழித்தடங்களுக்கு 226 அடி அகலம் கொண்ட வன நிலங்கள் வழங்கப்பட்டு வந்தன.
கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய வழிகாட்டுதல்களால், நில வகைப்பாடுகளைப் பரிசீலிப்பதில் நிர்வாக ரீதியான குழப்பங்கள் ஏற்பட்டன.
உயர்நிலை ஆலோசனையும் தீர்வும்
இந்தத் தேக்கநிலையைச் சரிசெய்ய கடந்த மாதம் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில், நிலம் கையகப்படுத்துவதில் இருந்த தடைகளை நீக்கி ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நில அளவு: வனப்பகுதிகளில் மின் கோபுரங்கள் அமைக்கத் தேவையான 226 அடி அகல நிலத்தை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பசுமைப் பாதுகாப்பு: மின்பாதை அமையும் இடங்களில் மரங்கள் அகற்றப்பட்டால், அந்த இடங்களில் உயரமாக வளராத (வளர்ச்சி குறைந்த) குறுஞ்செடி அல்லது மரங்களை நடவு செய்ய வேண்டும். வனவிலங்கு பாதுகாப்பு: மின் வழித்தடங்கள் அமைப்பதால் பாதிக்கப்படும் வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அவற்றுக்கான மாற்று வாழ்விடங்களை உருவாக்கித் தர வேண்டும்.
இந்த நடைமுறைகளைப் பின்பற்றி, மின் வழித்தடங்கள் அமைக்க நிலம் கோரி வரும் விண்ணப்பங்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள உரிய அதிகார அமைப்புகள் பரிசீலித்து, பணிகளைத் தொடங்க அனுமதி வழங்கலாம் என்று ஒன்றிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த உத்தரவின் மூலம், தடைப்பட்டுக் கிடந்த பல முக்கிய மின் திட்டங்கள் விரைவில் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
