‘‘கிறிஸ்துமஸ் விழாக்களில், முதல் ஆளாக கலந்துகொள்ளும் முதல்வர் ஸ்டாலின், ஹிந்து மத விழாக்களில் ஏன் கலந்துகொள்ள மறுக்கிறார்?
நெல்லையில், சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தங்களின் ஆட்சி, சிறுபான்மையினரின் பொற்கால ஆட்சி என்றும், அவர்களின் பாதுகாப்பு அரணாக, தங்களின் ஆட்சி இருக்கும் என்றும் முதல்வர் கூறிவிட்டார். அப்படி எனில், ஹிந்துக்களை பாதுகாக்கும் எண்ணம் இல்லையோ என்றுதானே கருதவேண்டியுள்ளது! ‘ஆடி மாத கூழ் விழா!’ என்று ஒன்றை ஏற்பாடு செய்து, அவரை அழைத்தால், என்ன செய்வார் என்று பார்க்கலாமே!’’
‘தினமலர்’ வாரமலர்,
4.1.2026, பக்கம் 10
இதுபோன்ற குற்றச்சாட்டை தி.மு.க. மீது பார்ப்பன ஏடுகளும், இதழ்களும் தொடர்ந்து சுமத்திக் கொண்டே இருக்கின்றன!
இந்து மத விழாவில் கலந்துகொள்ளாது, இந்து மதப் பண்டிகைக்கு ஏன் வாழ்த்துக் கூறுவதில்லை?
இந்து மதத்தில் தானே வருணம் இருக்கிறது; பிறப்பின் அடிப்படையில் உயர்வு – தாழ்வு இருக்கிறது.
‘இந்து’ என்று ஏற்றுக் கொண்டால், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வருணங்களையும் ஏற்கவேண்டுமே!
நான்காம் வருணமான ‘சூத்திரன்’ என்பதை ஏற்றுக்கொண்டால், ‘விபசாரி மகன்’ என்பதை ஒப்புக் கொள்ளவேண்டுமே!
இந்து மதத்தின் முக்கிய ஸ்மிருதியான மனுதர்ம சாஸ்திரம் என்ன கூறுகிறது?
மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 415 என்ன சொல்லுகிறது?
இதோ:
சூத்திரன் என்றால், யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்,
பக்தியினால் வேலை செய்கிறவன்,
விலைமாதர், ‘தேவடியாள் மகன்’, விலைக்கு வாங்கப்பட்டவன்,
ஒருவனால் கொடுக்கப்பட்டவன்,
குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்,
குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர்.
விபசாரி மகன் முதல் மேலே எடுத்துக்காட்டப்பட்ட ஏழையும் ஒப்புக்கொண்டு, இந்து மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூற வேண்டுமா?
சுயமரியாதை உள்ள ஒருவன் இதனை ஒப்புக்கொள்வானா – ஏற்றுக்கொள்வானா?
‘மானமும், அறிவும் மனிதர்க்கழகு!’ என்று சொன்னவர் தந்தை பெரியார்.
அந்தப் பெரியார் வழி வந்தவர்கள் எப்படி இந்து மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூற வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்?
இவற்றை எல்லாம் ஒப்புக்கொள்ளச் செய்யவேண்டும் என்கிற ஜாதித் திமிர், ஆணவம் இவற்றிலிருந்து இந்த 2026 ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்களை விட்டு விலகவில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது!
‘சூத்திரன் என்றால், ஆத்திரம் கொண்டடி’, ‘இந்து என்று சொல்லாதே – இழிவைத் தேடிக் கொள்ளாதே!’ என்று சொன்னது எல்லாம் மறந்து போய்விட்டதா? ஒருக்கால் மீண்டும் அந்த ஒலி முழக்கமெல்லாம் வெடித்துக் கிளம்ப வேண்டும் என்று விரும்புகிறார்களா?
அறிவு நாணயம் இருந்தால், இதற்குப் பதில் சொல்லிவிட்டு, ‘இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துச் சொல்வதில்லை?’ என்ற வினாவை முன்வைக்கட்டும்!
– மயிலாடன்
