மதுரை, ஜன.7 திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில், வேந்தரான ஆளுநரை அவ மதிக்கும் வகையில் நடந்து கொண்ட மாண வியின் பட்டத்தை ரத்து செய்ய தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
திருச்செந்தூர் வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவின் விவரம் வருமாறு:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தர னார் பல்கலை.யில் 2025 ஆக.13 இல் பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலை. வேந்தரான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப், வேந்தரிடம் முனைவர் பட்டத்தை பெறாமல், துணை வேந்தர் சந்திரசேகரிடம் அளித்து பெற்றுக் கொண்டார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவுறுத்தியும், வேந்தர் தன்னிடம் பட்டம் பெற வேண்டும் என சைகை காண்பித்தபோதும் அதை ஜீன் ஜோசப் அலட்சியப்படுத்தினார்.
விழா நடக்கும் போதே அவர், ‘தனது கணவர் தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ளார். ஆளுநர் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை. அதனால் அவர் கையால் பட்டம் பெற விரும்பவில்லை. பட்டம் வழங்க ஆளுநரைவிட இணைவேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அதிக தகுதிகள் உள்ளன,’ என பேட்டியளித்தார்.
அரசியல் காரணங்களுக்காக வேந்த ரான ஆளுநரை பொது வெளியில் அவ மதித்துள்ளார். வேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொள்ளுமாறு துணைவேந்தர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். கல்வி சம்பந்தமான நிகழ்ச்சியை அரசியல் ஆதாயம், விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதை அனு மதிக்கக்கூடாது.
ஜீன் ஜோசப்பிற்கு பட்டம் வழங்கியதில் பல்கலைக் கழக சட்டத்தின்படி செயல்படாத துணைவேந்தர் சந்திரசேகரன் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஜீன் ஜோசப்பிற்கு வழங்கிய பட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நிலைநிற்கத்தக்கதுதானா என்பதை முடிவு செய்ய நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. பல்கலை தரப்பு வழக்குரைஞர் மகபூப் ஆத்திப், இதற்கு முன் பல்கலை.யில் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க விதிகளை உருவாக்குவதா, இல்லையா என்பது குறித்து பல்கலை. சிண்டிகேட் முடிவெடுக்கும் என்றார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பல்கலை. சட்டம், விதிகளில் இடமில்லை. இம்மனு நிலைநிற்கத்தக்கது அல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர் நீதிபதிகள்.
