பிஜேபியின் கைப்பாவையா அ.தி.மு.க.? பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போல பழனிசாமியும் ஒப்புக்கொள்ள வேண்டும் வேலுமணியிடம் அமித்ஷா வலியுறுத்தல்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 7- ‘தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைக்க, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போல, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஒப்புக்கொள்ள வேண்டும்’ என, அ.தி.மு.க., மேனாள் அமைச்சர் வேலுமணியிடம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்திய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2024 லோக்சபா தேர்த லில், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வி அடைந்தன. இரு கட்சிகளும் வாங்கிய வாக்குகளை சேர்த்தால், 26 எம்.பி., தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தலைவர்கள் பேசி வந்தனர்.

இதையடுத்து, சட்டசபைத் தேர்தலுக்காக, அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி மீண்டும் உருவானது. தமிழ்நாடு பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப் பட்டு, நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். ஆனால், ஒன்பது மாதங்களாகியும், இக்கூட்டணியில் புதிதாக எந்தக் கட்சியும் சேர வில்லை.

விஜய்யை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து விட்டதால், அக்கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. பா.ம.க., – தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகளைத்தான் எதிர்பார்க்க வேண்டும். அதில், பா.ம.க., பிளவுபட்டுள்ளது. தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க தே.மு.தி.க., விரும்புவதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், மேனாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மறுத்து வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் செல்வாக்கு உள்ள மூத்த தலைவர் செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்து விட்டார்.

இந்நிலையில், தமிழ்நாடு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, திருச்சியில் அவர் தங்கியிருந்த விடுதியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து பேசினார்.

அப்போது, ‘சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்காவிட்டால், பா.ஜ.,வை விட அ.தி.மு.க.,வுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படும். எனவே, தி.மு.க., கூட்டணியில் இல்லாத கட்சிகள் அனைத்தையும், நம் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும்’ என அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக, பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில், தினகரனின் அ.ம.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்குமாறு வலியுறுத்தினோம். ஆனால், பழனிசாமி மறுத்து விட்டார். இரு கட்சிகளும் கூட்டணிக்கு வந்திருந்தால், தி.மு.க.,வுக்கு தனி பெரும்பான்மை கிடைப்பதை தடுத்திருக்கலாம். இதை வேலுமணியிடம் சுட்டிக்காட்டிய அமித் ஷா, வரும் தேர்தலில் பன்னீர்செல்வம், தினகரன், தே.மு.தி.க., – பா.ம.க., புதிய தமிழகம் என அனைத்து கட்சிகளையும் சேர்க்க வேண்டும்.

பிஹார் சட்டசபை தேர்தலில் சிராக் பஸ்வான், ஜிதன்ராம் மஞ்சி ஆகியோரை கூட்டணியில் சேர்க்க, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் விடாப்பிடியாக மறுத்து வந்தார்; ஆனால், பா.ஜ.,வின் வற்புறுத்தலை ஏற்று, கூட்டணியில் சேர்த்தார். இதனால், 2024 நாடாளுமன்ற, 2025 சட்டசபைத் தேர்தல்களில் நம் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், வெற்றியை கணக்கில் கொண்டு கூட்டணி முடிவை நிதிஷ்குமார் எடுத்தார். அவரைப் போலவே, பழனிசாமியும் பிடிவாதத்தை தளர்த்த வேண்டிய நேரமிது என வேலுமணியிடம் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

வலுவான கூட்டணி இல்லா விட்டால், அ.தி.மு.க., நிர்வாகிகளே நம்பிக்கை இழந்து வேறு கட்சிகளுக்கு சென்று விடுவர் எனவும் அமித் ஷா எச்சரித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி விடுதியில் நேற்று முன்தினம் அமித் ஷாவை சந்தித்த அ.தி.மு.க., மேனாள் அமைச்சர் வேலுமணி, இரண்டாவது நாளாக நேற்றும் அவரை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியுஸ் கோயல் உடனிருந்தார். அமித் ஷா கூறிய தகவல்களை கேட்ட வேலுமணி, அவற்றை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அதன்பின், ஒன்றிய அமைச்சர்கள் பியுஸ் கோயல், முருகன், தமிழ்நாடு பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருடன் அமித் ஷா நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *