சென்னை, ஜன.7– மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கான இடங்களில், வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு 20 சதவீத இடங்களை ஒதுக்கக் கோரி சென்னையில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.
வெளிநாடுகளில் மருத்துவம் முடித்த மாணவர்களுக்குத் தற்காலிகப் பதிவுச் சான்றிதழ் வழங்குவதில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் காலந்தாழ்த்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. மொத்த பயிற்சி இடங்களில் 20 சதவீதத்தை வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் மற்றும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி பிரிவினர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்: “அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி இடங்களில் 20 சதவீதம் வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். எனவே, தமிழ்நாடு அரசும் இந்தக் கோரிக்கையில் உடன்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
அதேநேரம், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் பயிற்சி பெறலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அனுமதித்தும், அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
இக்கோரிக்கையைத் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக மக்களவையில் பேசுவதுடன், ஒன்றிய அமைச்சரிடமும் வலியுறுத்துவேன்,” என்றார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு
விசாரணைக்கு ஆஜராக
த.வெ.க. தலைவர் விஜய்க்கு
சி.பி.அய். அழைப்பாணை!
த.வெ.க. தலைவர் விஜய்க்கு
சி.பி.அய். அழைப்பாணை!
புதுடில்லி, ஜன. 7– கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு சிபிஅய் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
கடந்த ஆண்டு செப். 27ஆம் தேதி கரூரில் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஅய் விசாரித்து வருகிறது.
இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு நவ.25ஆம் தேதி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் புதுடில்லியில் சிபிஅய் விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களோடு, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் சிபிஅய் விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஅய் அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர்.
இதேபோல், கடந்த ஆண்டு டிச.4ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலும் சிபிஅய் அதிகாரிகள் முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் அப்போது இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஅய் அழைப்பாணை அனுப்பி உள்ளது. அதில், ஜனவரி 12ஆம் தேதி டில்லியில் உள்ள சிபிஅய் தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் பிறகு, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஅய் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
