சென்னை, ஜன.7– தமிழ்நாடு மக்களிடையே உடல் உறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், தமிழ்நாடு அரசின் சார்பில் ‘மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டம்’ உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு வந்தன.
பின்னர், ‘தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம்’ (TRANSTAN) உருவாக்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தை அந்த ஆணையமே செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இதனால், தேசிய அளவில் உடல் உறுப்பு கொடையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உடல் உறுப்புக் கொடையை ஊக்குவிக்கும் வகையில், மூளைச்சாவு அடைந்த பின் உறுப்புக் கொடை செய்தவர்களுக்கு அரசு சார்பில் அரசு மரியாதை அளிப்பதோடு, அவர்களது குடும்பத்தினரை சிறப்பிக்கும் நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
2025-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள்
மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் இது குறித்துக் கூறியதாவது:
“தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் உடல் உறுப்புகள் கொடை அளிப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்குச் சுமார் 1,500 பேர் வரை பயன் பெறுகின்றனர்.
மொத்தக் கொடை அளித்தோர்
266 பேர் (கடந்த ஆண்டில்). விபத்தினால் மூளைச்சாவு: 186 பேர். விபத்தில்லாத காரணங்களால்: 80 பேர். பாலின அடிப்படையில்: ஆண்கள் – 211, பெண்கள் – 55. மருத்துவமனை வாரியாக: அரசு மருத்துவமனைகளில் 154 பேர், தனியார் மருத்துவமனைகளில் 112 பேர். இந்த 266 நபர்களின் உடல் உறுப்புக் கொடை மூலம் மொத்தம் 1,476 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.”
வெளி உறுப்புகள் கொடை குறித்த விளக்கம்: சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உள் உறுப்புகளைத் கொடையாக அளிக்கப் பலர் முன்வந்தாலும், வெளி உறுப்புகளை (கைகள் போன்றவை) கொடையாக அளிக்க மக்களிடையே தயக்கம் இருக்கிறது.
கைகள் கொடையாகப் பெறப் பட்டாலும், அந்த உடலுக்குச் செயற்கை கைகள் பொருத்தப்படும். இதனால் இறந்தவரின் உடல் கைகள் இல்லாமல் இருக்குமோ என்ற தயக்கம் வேண்டாம். அவர்கள் கொடையாக அளித்த கைகள் மற்றவர்களுக்குப் புதிய வாழ்வு அளிக்கும். வெளி உறுப்புகள் கொடை அளிப்பதில் மக்களிடையே இருக்கும் உளவியல் ரீதியான சிக்கல்களைப் போக்கத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
