புவனேஸ்வர்: குடிசையில் பிறந்த பழங்குடியினச் சிறுமி தனது அயராத முயற்சியால் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று தேசிய சிறார் விருதை வென்று சாதித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் பெகெட்டா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோஷ்னா சபர். பழங்குடியினத்தைச் சேர்ந்த இவரது தந்தை கிர்த்தன் சபர், தாய் காசமெரி சபர் ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
ஏழ்மையில் வாடினாலும் பள்ளிக்குச் செல்லும் ஆர்வம் ஜோஷ்னாவுக்கு இருந்தது. பள்ளியில் படித்தபோதே பளுதூக்குதல் விளையாட்டிலும் ஆர்வம் காட்டினார். இதையடுத்து புவனேஸ்வரில் உள்ள டென்விக் உயர் செயல்பாட்டு விளையாட்டு மய்யத்துக்கு கொண்டு வரப்பட்டார்.
இதன் பின்னர் புவனேஸ்வரில் உள்ள இலவச பள்ளியான கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் ஸ்டடீஸில்(கேஅய்எஸ்எஸ்) சேர்ந்தார். இங்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இலவசக் கல்வி, தங்குமிடம், விளையாட்டுப் பயிற்சி ஆகிய வசதிகளைப் பெறுகின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள் பழங் குடியினத்தைச் சேர்ந்தவர்கள். கேஅய்எஸ்எஸ் நிறுவனர் மருத்துவர் அச்யுதா சமந்தாவின் வழிகாட்டுதலின் பேரில் பன்னாட்டு பளுதூக்கும் போட்டிகளில் ஜோஷ்னா பங்கேற்றார். சிறு வயது முதலே விளையாட்டின் மீதான தீராத ஆர்வத்தால் அவருக்கு வெற்றி கைகூடியது.
2018இல் பயிற்சியைத் தொடங்கிய ஜோஷ்னா, 2023இல் நடைபெற்ற உலக இளையோர் பளுதூக்குதல் (40 கிலோபிரிவு) போட்டியில் வெண்கலம் வென்றார். 2024இல் நடைபெற்ற இதே போட்டியில் வெள்ளியும், 2025இல் வெண்கலத்தையும் கைப்பற்றினார். 2023இல் டில்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் பளுதூக்குதல் போட்டியில் வெண்கலமும், 2024இல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் பளுதூக்குதல் போட்டியில் தங்கமும் வென்று சாதனைப் பெண்ணாக மாறினார்.
2023இல் கிரேட்டர் நொய்டாவில் நடந்த காமன்வெல்த் இளையோர் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார். 2024இல் சுவாவில் நடைபெற்ற காமன்வெல்த் யூத் போட்டியிலும் அவர் தங்கத்தைக் கைப்பற்றி சாதித்தார்.
அதுமட்டுமல்லாமல் கேலோ இந்தியா இளையோர் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கமும், தேசிய இளையோர் பளுதூக்குதல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் ஜோஷ்னா வேட்டையாடி வருகிறார். பளுதூக்குதல் விளையாட்டில் முக்கியத்துவம் பெற்று வரும் ஜோஷ்னாவுக்கு தற்போது பிரதமரின் தேசிய சிறார் சாதனை விருது வழங்கப்பட்டது. 16 வயதுக்குள் அவர் செய்த சாதனைகளைப் பாராட்டி இந்த விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
குடிசையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றுள்ள வெற்றி வீராங்கனை ஜோஷ்னாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
