இந்த உலகில் மனிதன் மட்டுமல்ல, மனிதனைச் சுற்றி வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்க்கை உண்டு என்பதை தன் வாழ்நாளையே அர்ப்பணித்து உணர்த்தியவர் ஜேன் குட்டால் (JANE GOODALL). அவர் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல; இயற்கையின் மொழியை மனிதர்களுக்கு மொழிபெயர்த்த ஒரு மாபெரும் மனிதநேயவாதி.
ஆரம்ப வாழ்க்கை
ஜேன் குட்டால் 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே விலங்குகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பொம்மைகளைக் காட்டிலும் விலங்குகளைப் பற்றி படிப்பதிலும், அவற்றைக் கவனிப்பதிலும் அதிக நேரம் செலவிட்டார். குறிப்பாக குரங்குகள் அவரை மிகவும் கவர்ந்தன. “ஒரு நாள் நான் ஆப்பிரிக்காவுக்குச் சென்று குரங்குகளை ஆய்வு செய்வேன்” என்ற கனவு அவருக்குச் சிறு வயதிலேயே இருந்தது.

இதற்குக் காரணம் இவருடைய இரண்டாம் பிறந்த நாளின் போது இவரது தந்தை இவருக்கு ஒரு குரங்கு பொம்மையைப் பரிசளித்தாராம். அந்தப் பொம்மையை குட்டால் மிகவும் விரும்பினாராம். அதுவே இவரின் ஆய்வுகளுக்கு வித்தாக இருந்துள்ளது. இறுதிவரை அப்பொம்மையை இவர் பாதுகாத்தும் வைத்திருக்கின்றார்.
சிம்பான்சிகளுடன் தொடங்கிய ஆய்வு
1960ஆம் ஆண்டு ஜேன் குட்டால் ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டிலுள்ள கோம்பே (Gombe) என்ற காடுகளுக்குச் சென்றார். அங்கு அவர் சிம்பான்சிகள் எனப்படும் மனிதனுக்கு மிக அருகிலான குரங்கினத்தை ஆய்வு செய்யத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் பெண் ஒருவர் தனியாக காடுகளில் தங்கி ஆய்வு செய்வது மிக அரிதான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் அச்சத்திற்கும், சவால்களுக்கும் அஞ்சாமல், ஜேன் குட்டால் தன் ஆய்வைத் தொடர்ந்தார்.
அவர் சிம்பான்சிகளை ஓர் ஆய்வுப் பொருளாக மட்டும் பார்க்கவில்லை. ஒவ்வொரு சிம்பான்சிக்கும் பெயர் வைத்து, அவைகளின் பழக்கவழக்கங்கள், உணர்ச்சிகள், குடும்ப உறவுகள் போன்றவற்றைக் கவனித்தார். இதன் மூலம் சிம்பான்சிகளுக்கும் மனிதர்களைப் போலவே அன்பு, கோபம், துக்கம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் இருப்பதை உலகிற்கு நிரூபித்தார்.
முக்கிய கண்டுபிடிப்புகள்
ஜேன் குட்டாலின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்னவெனில், சிம்பான்சிகள் கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்பதே. மரக்கிளைகளை எடுத்து, அதைக் கொண்டு எறும்புகளைப் பிடித்து உண்ணும் பழக்கத்தை அவர் கண்டறிந்தார். இதற்கு முன்பு கருவிகளைப் பயன்படுத்துவது மனிதனுக்கே உரியது என்று விஞ்ஞான உலகம் நம்பியது. இந்த கண்டுபிடிப்பு மனிதன் மற்றும் விலங்கு குறித்த கருத்துகளை முற்றிலும் மாற்றியது.
இயற்கை சார்ந்த பணிகள்
காலப்போக்கில் காடுகள் அழிக்கப்பட்டதும், சிம்பான்சிகளின் எண்ணிக்கை குறைந்ததும் ஜேன் குட்டாலை மிகவும் கவலைக் குள்ளாக்கியது. அதனால் அவர் ஆய்வாளராக மட்டும் இல்லாமல், இயற்கைப் பாதுகாவலராக மாறினார். அவர் தொடங்கிய ஜேன் குட்டால் இன்ஸ்டிடியூட் (Jane Goodall Institute) என்ற நிறுவனம், விலங்குகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராம மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் போன்ற பல பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும், ரூட்ஸ் மற்றும் சூட்ஸ் (Roots & Shoots) என்ற திட்டத்தின் மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இயற்கையை நேசிக்கவும், சமூக பொறுப்புடன் வாழவும் ஊக்கமளித்து வருகிறார்.
மனிதநேயத்தின் குரல்
ஜேன் குட்டால் எப்போதும் ஒரு கருத்தை வலியுறுத்துகின்றார்: அது
“நம்முடைய சிறிய செயல்களே பெரிய மாற்றத்தை உருவாக்கும்.” என்பதாகும்.
இயற்கையை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதனின் பொறுப்பும் கூட. மரங்களை காத்தல், விலங்குகளை நேசித்தல், இயற்கையை மதித்தல் ஆகியவை தனி மனித வாழ்வின் அடிப்படைப் பண்புகளாக இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.
நிறைவு
ஜேன் குட்டால் என்பவர் ஒரு விஞ்ஞானி மட்டும் அல்ல; அவர் ஒரு தத்துவவாதி. இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனிதனின் உண்மையான முன்னேற்றம் என்பதை உலகிற்கு உணர்த்தியவர். நாம் இயற்கையைப் பற்றி பேசும் போதும், விலங்குகளின் உரிமைகள் குறித்து சிந்திக்கும் போதும், ஜேன் குட்டாலின் பங்களிப்பு என்றென்றும் மறக்க முடியாத ஒன்று.
தம் வாழ்வின் பெரும் பகுதியை அதாவது கிட்டத்தட்ட 45 வருடங்களை சிம்பான்சிகளுடன் கழித்த ஜேன் குட்டால் தனது 91ஆம் அகவையில் கடந்த 1 அக்டோபர் 2025 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்.
இயற்கையை நேசிப்போம்… ஜேன் குட்டால் காட்டிய இயற்கையின் பாதையில் மனிதநேயத்தோடு வாழ்வோம்.
