வெனிசுலா, ஜன.6- வெனிசுலா நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. வெனிசுலாவை இனி நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அய்நா சபையின் அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று (6.1.2026) நடைபெறுகிறது. வெனிசுலா மீதான அமெரிக்கா தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்துள்ளது.
வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி நிகோலஸ் மற்றும் அவரின் மனைவியை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. இது அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரோ சிறைபிடிக்கப்பட்ட ஒளிப்படத்தை வெளியிட்டு, இனிமேல் வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். மேலும், வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. நிகோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டுள்ளார் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இது வெனிசுலாவில் அசாதரண சூழலை உருவாக்கியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நிகோலஸ் மற்றும் அவரின் மனைவி, இன்று (6.1.2026) நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர். இதனிடையே வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ், அந்த நாட்டின் எண்ணெய் வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை கண்காணித்து வருகிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அவர் வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்தார். 56 வயதான டெல்சி ரோட்ரிக்ஸ் வழக்குரைஞர் ஆவார். அவர் வெனிசுலா நாட்டின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றவர். அமெரிக்காவின் நெருக்கடிகளை தாக்கு பிடித்து, இந்த பிரச்சினையில் இருந்து எப்படி தீர்வு கொடுக்க போகிறார் என்பதை மொத்த உலகமும் உற்றுநோக்கி வருகிறது.
டிரம்பின் இந்த நடவடிக் கைக்கு சீனா, ரஷ்யா, பிரேஸில், கொலம்பியா, உருகுவே பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நிகோலஸ் மதுரோவை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்காவில் இருந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வெனிசுலா விவகாரத்தை உற்று கவனித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இதனால் வெனிசுலாவில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது. உலகின் எண்ணெய் வளம் அதிகமுள்ள வெனிசுலாவை குறிவைத்து அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கையின் பின்னணியில் பல்வேறு திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா, தங்கள் ராணுவப்படையை வெனிசுலா அருகே நிறுத்தி வைத்து தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அய்நா சபையின் அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று (6.1.2026) நடைபெறுகிறது. ஏற்கனவே அய்நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் வெளியிட்டிருந்த அறிவிப்பில், வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதல் மோசமான முன்னுதாரணம். இந்த விவகாரத்தில் பன்னாட்டு சட்ட திட்டங்கள் மீறப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டியிருந்தது.
விதிகளை மீறிய புகாரில் அமெரிக்கா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்த வகையில் கொலம்பியா நாடும் அய்நா சபைக்கு கடிதம் எழுதியிருந்தனர். கொலம்பியாவின் கோரிக்கையை ஏற்று, அய்நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று (6.1.2025) அவசரமாக கூடுகிறது. அமெரிக்கா நடத்திய தாக்குதல் தொடர்பாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிற தலைப்பில் அய்நா சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அய்நா பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த கூட்டத்தை வெனிசுலா நாடு மிகவும் எதிர்பார்ப்புடன் கவனித்து வருகிறது.
