அண்டார்டிகா நுண்ணுயிரிகள் (டேக்) என்ற நிறுத்தக் குறியீட்டைப் பயன்படுத்தி ‘பைரோலைசின்’ எனும் அரிய அமினோ அமிலத்தை உருவாக்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்; இது புதிய வகை புரதங்களை உருவாக்க வழிவகுக்கும்.
உயிரினங்களின் அடிப்படை கட்டமைப்பான மரபணு குறியீட்டில் (Genetic Code) ஒரு புதிய மாற்றத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிகா ஏரிகளில் வாழும் ஒருவகை நுண்ணுயிரிகள், பொதுவாக ‘புரத உற்பத்தியை நிறுத்து’ என்று சொல்லப்படும் கட்டளையை, ஒரு அரிய வகை அமினோ அமிலத்தை உருவாக்குவதற்கான கட்டளையாகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
பொதுவாக அனைத்து உயிரினங் களின் டி.என்.ஏ (DNA) அமைப்பிலும் நான்கு அடிப்படை எழுத்துகள் (A, G, C, T) உள்ளன. இவை மூன்று மூன்றாக இணைந்து ‘கோடான்’ (Codon) எனப்படும் குறியீடுகளை உருவாக்குகின்றன. மொத்தம் உள்ள 64 குறியீடுகளில், 61 குறியீடுகள் அமினோ அமிலங்களை உருவாக்கப் பயன்படுகின்றன. மீதமுள்ள 3 குறியீடுகள் ‘ஸ்டாப் கோடான்’ (Stop Codon) என அழைக்கப்படுகின்றன. இவை புரதச் சங்கிலி உருவாவதை நிறுத்துவதற்கான சமிக்ஞைகள் ஆகும்.
ஆனால், அண்டார்டிகாவில் காணப்படும் மெத்தனோ கோகாய்ட்ஸ் பர்டோனி (Methano coccoides burtonii) மற்றும் மனித குடலில் காணப்படும் ஒரு வகை ‘ஆர்க்கியா’ (Archaea) நுண்ணுயிரிகள் இந்த விதியை மாற்றியமைத்துள்ளன.
வழக்கமாக டேக்(TAG) என்ற மரபணு குறியீடு கண்டறியப் பட்டால், அங்கே புரத உற்பத்தி நின்றுவிடும். ஆனால் இந்தச் சிறப்பு நுண்ணுயிரிகளில், TAG என்பது ‘பைரோலைசின்’ (Pyrrolysine – Pyl) என்ற அரிய வகை அமினோ அமிலத்தைச் சேர்ப்பதற்கான கட்டளையாகச் செயல்படுகிறது.
இதுவரை விஞ்ஞானிகள் இது தற்செயலாக நடக்கும் என்று நினைத்தனர். ஆனால், இந்த ஆய்வின் மூலம் அந்த நுண்ணுயிரிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும், அனைத்து இடங்களிலும் டேக்(TAG) குறியீட்டை ஒரு அமினோ அமிலமாகவே கருதுகின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை விஞ்ஞானிகள் பைல் கோட்(Pyl Code) என்று அழைக்கின்றனர்.
கொல்கத்தாவின் போஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் அப்ராஜோதி கோஷ் மற்றும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த தன்வீர் உசேன் ஆகியோர் இந்தக் கண்டுபிடிப்பு குறித்து பெரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இயற்கையில் இதுவரை இல்லாத, தனித்துவமான பண்புகளைக் கொண்ட புரதங்களை விஞ்ஞானிகளால் உருவாக்க முடியும்.
ஆய்வகத்தில் சாதாரண ‘ஈ-கோலை’ (E. coli) பாக்டீரியாக்களை மரபணு மாற்றம் செய்து, இந்த அரிய அமினோ அமிலத்தைப் பயன்படுத்தி புதிய பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். மருந்து தயாரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க இது ஒரு மைல்கல்லாக அமையும்.
இந்த அரிய வகை அமினோ அமிலம் அந்த நுண்ணுயிரிகளுக்கு அண்டார்டிகா போன்ற கடுமையான குளிரிலும், மனித குடல் போன்ற சூழலிலும் உயிர்வாழ ஏதேனும் கூடுதல் பலத்தைத் தருகிறதா? என்பதை நோக்கியே அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் நகர்கின்றன. இயற்கை தனது ரகசியங்களை இவ்வளவு நுணுக்கமாக ஒளித்து வைத்திருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
