கோள் என்பது ஏதோ ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும். ஆனால், எந்த ஒரு நட்சத்திரத்தின் பிடியிலும் இல்லாமல், விண்வெளிப் பெருவெளியில் தன்னிச்சையாக அலைந்து திரியும் கோள்களை விஞ்ஞானிகள் ‘ரோக் பிளானட்கள்’ அல்லது ‘அனாதைக் கோள்கள்’ என்று அழைக்கின்றனர்.
பால்வெளி மண்டலத்தில் எந்தவொரு நட்சத்திரத்தையும் சுற்றாமல், விண்வெளியில் அநாதையாக அலைந்து திரியும் ஓர் அபூர்வ கோளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமிக்கு மிக அருகாமையில், அதாவது சுமார் 10000 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டறியப் பட்டுள்ள இந்தக் கோள், விண்வெளி ஆய்வில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
2024ஆம் ஆண்டு தொலைதூர நட்சத்திரத்தின் ஒளியில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து இந்தக் கோள் கண்டறியப்பட்டது.
ஒரு கோள் தொலைதூர நட்சத்திரத்தைக் கடக்கும்போது, அதன் ஈர்ப்பு விசை அந்த நட்சத்திரத்தின் ஒளியை வளைத்து, ஒரு பெரும் கண்ணாடி போலப் பெரிதாக்கிக் காட்டும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே இக்கோள் கண்டறியப்பட்டது.
துல்லியமான அளவு
அய்ரோப்பிய விண்வெளி முகமையின் கையா (Gaia) விண்கலம் மற்றும் பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலமாக இந்த நிகழ்வு ஒரே நேரத்தில் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் அந்தக் கோள் பூமியிலிருந்து சுமார் 9,950 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதும், அதன் நிறை பூமியை விட 70 மடங்கு பெரியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளின் கருத்துப்படி, ஒரு கோள் மண்டலம் உருவாகும் ஆரம்பக் காலத்தில் ஏற்படும் மோதல்கள் அல்லது ஈர்ப்பு விசை மாற்றங்கள் காரணமாக சில கோள்கள் அந்த மண்டலத்தை விட்டு வெளியே தூக்கி எறியப்படலாம். சில நேரங்களில் நட்சத்திரங்களைப் போலவே வாயு மற்றும் தூசிக் கூட்டங்கள் சுருங்குவதன் மூலமும் இத்தகைய தனித்த கோள்கள் உருவாக வாய்ப்புள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு ‘சயின்ஸ்’ (Science) இதழில் ஜனவரி 1 அன்று வெளியிடப்பட்டது.
பால்வெளி மண்டலத்தில் இது போன்ற கோடிக்கணக்கான கோள்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 2026இல் ஏவப்படவுள்ள நாசாவின் நான்சி கிரேஸ் ரோமன் (Nancy Grace Roman) தொலைநோக்கி மற்றும் சீனாவின் எர்த் 2.0 (Earth 2.0) திட்டம் ஆகியவை விண்வெளியில் மறைந்துள்ள இது போன்ற பல கோள்களைக் கண்டறிய உதவும்.
