சென்னை, ஜன.6 ஜாதி, மதம் கல்விக்கு என்றும் தடையில்லை என மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். மடிக்கணினி என்பது பார்க்கும் கருவி கிடையாது; கண்டுபிடிப்புகளை உருவாக்கும் கருவி. தமிழன் கைகளில் உலகம் வர வேண்டும் என்பதின் முதல் படியாக லேப்டாப் வழங்குவதை பார்க்கிறேன் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு:
கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என 5 மாவட்ட மக்கள் கவலை!
மதுரை, ஜன.6 தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள, 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான வைகை அணையின் நீர்மட்டம் 48 அடியாகக் குறைந்துள்ளதால், வரவிருக்கும் கோடைகாலத்தில் கடுமையான குடிநீர் மற்றும் சாகுபடி நீர் பற்றாக்குறை ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் தேவைக்காக அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை இல்லாததால், அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலுமாக நின்றுபோயுள்ளது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் சுமார் 17 அடி குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக இன்னும் ஓரிரு நாட்களில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் வேகமாகச் சரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்ட சரிவை ஈடுகட்ட, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அணையில் உள்ள நீர் இருப்பு குறைந்து வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் கோடைகால நீர் மேலாண்மை குறித்த கவலையில் உள்ளனர்.
தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்கள் தனிநபர்
கலைக் காட்சியாக நடத்த தமிழ்நாடு அரசு நிதியுதவி விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, ஜன.6 தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்கள் தனிநபர் கலைக் காட்சியாக நடத்த தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்குகிறது. இந்த நிதியுதவியை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு அரசின் சார்பில், கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழுவின் மூலம், தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப் படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனிநபர் கலைக் காட்சியாக நடத்திட ஒரு நபருக்கு ரூ.25,000/- வீதம் 10 கலைஞர்களுக்கும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக் கலைக்காட்சியாக நடத்திட ஒரு குழுவுக்கு ரூ.50,000/- வீதம் 5 குழுக்களுக்கும் அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
* விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தல் வேண்டும்.
* கலை பண்பாட்டுத் துறை – ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச்செம்மல் விருது பெற்றவர்கள், கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கக் கூடாது.
*இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோர் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இயலாது.
* விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒளிப்படத் துடன் கூடிய தன் விவரக் குறிப்பு (Bio. Data), சிறந்த படைப்புகளின் ஒளிப்படங்கள் 5 எண்ணிக்கைகள் (A4 size), அவரவர்கள் படைப்புத் திறன் பற்றிய செய்தித் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 20.01,2026 மாலை 05.00 மணிக்குள் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
