கீழடி, ஜன.6 மதுரைக்கு அருகில் கண்டறியப்பட்ட கீழடி தொல்லியல் தளத்தில் வாழ்ந்திருந்த மக்கள், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தைக் கைவிட்டு வெளியேறினர். சுமார் 1,150 ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் அந்த இடத்தைக் கைவிட்டு அகன்ற தற்கான காரணத்தை விவரிக்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று.
அக்டோபர் 25ஆம் தேதி Current Science ஆய்விதழில் “Luminescence chronology of sediments from the prehistoric civilisation sites along the Vaigai river, India” என்ற கட்டுரை வெளியானது. இந்த ஆய்வுக் கட்டுரையை ஆமதாபாத் நகரில் உள்ள Physical Research Laboratory-அய் சேர்ந்த ஆய்வாளர்களும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.
கீழடி தொல்லியல் தளத்தில் கிடைத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகள், அங்கு வாழ்ந்து வந்த மக்கள் அந்த இடத்தைக் கைவிட்டு அகன்றதற்கான காரணத்தைப் புலப்படுத்துவதாக இந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
அதாவது, அருகிலுள்ள வைகை நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கே, அங்கு வாழ்ந்த மக்களை அந்த இடத்தை விட்டு செல்லத் தூண்டியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நிகழ்வு சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்திருக்கலாம் என்றும் இவர்களது ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை ஒன்றிய தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தியது.
இந்த அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. ஒன்றிய தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளுக்குப் பிறகு, 2017ஆம் ஆண்டில் இருந்து மாநில தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து அகழாய்வுகளை நடத்தி வருகிறது.
இங்கு கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகளும் இங்கு கிடைத்த தொல் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகளும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கிலேயே ஒரு நகரம் இந்தப் பகுதியில் இயங்கியிருக்கலாம் என்ற செய்திகளைத் தந்தன.
இந்த நிலையில் கீழடியில் நடந்த அய்ந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் சில ஓஎஸ்எல் எனப்படும் Optically Stimulated Luminescence ஆய்வுக்கு சில ஆய்வாளர்களால் அனுப்பப்பட்டன. அந்த ஆய்வின் முடிவுகள், கீழடியில் வாழ்ந்த மக்கள் வைகையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக, சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தப் பகுதியை விட்டு வெளி யேறியிருக்கலாம் எனத் தெரிய வந்திருப்பதாக ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
