மாநகராட்சி தகவல்
சென்னை, ஜன.6- சென்னை மாநகராட்சியில் உள்ள 1,373 பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணிகள் நேற்று (5.1.2026) மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் சராசரியாக நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டு கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
தூய்மை பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேருந்து நிறுத்தங்கள், சாலைகள், பாலங்கள், மயானபூமிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நேற்று (5.1.2026) காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள 1,373 பேருந்து நிறுத்தங்களிலும் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இந்த தீவிர தூய்மை பணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சுவரொட்டிகளை அகற்றுதல், பேருந்து நிறுத்தங்களைச் சுற்றி உள்ள செடிகள், குப்பை உள்ளிட்ட திடக்கழிவுகளை அகற்றுதல், தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மை பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகளை கண்காணிக்க உரிய பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களது மேற்பார்வை யில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘தமிழ்நாட்டு நலனைக் காக்க மாணவர்கள் எதைச் செய்ய வேண்டும்?”
தலைமைச் செயலாளர் முருகானந்தம் அய்.ஏ.எஸ்.
சென்னை, ஜன.6 ‘‘யுபிஎஸ்சி தேர்வில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றால்தான் தமிழ்நாட்டு நலனைக் காக்க முடியும்” என மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேசியுள்ளார்.
கல்லூரி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு மடிக் கணினி வழங்கும் திட்டத்தை இரண்டு கட்டங்களாக தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது. இதன் முதல் கட்டம், நேற்று (5.1.2026) சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மய்யத்தில் நடந்தது.
இதில் முதலமைச்சர் பங்கேற்று மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், யுபிஎஸ்சி (UPSC) தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றால்தான் தமிழ்நாட்டு நலனைக் காக்க முடியும். ஒன்றிய அரசில் இணைச் செயலாளர்கள், செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தால்தான் தமிழ்நாட்டின் மண்ணைப் பற்றித் தெரியும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வருவார்கள்.
சென்னையில் அண்ணாநகரில் யுபிஎஸ்சி படிப்பவர்களுக்கு தங்குவதற்கு இலவச விடுதி உள்ளது. டில்லியில் சென்று படிப்பவர்களுக்கு இலவசமாக தங்கிப் படிப்பதற்கு அடுத்த ஆண்டு முதல் அரசு ஏற்பாடு செய்துள்ளது. வேறு எந்த மாநில அரசும் இதுபோன்று செய்வதில்லை.
சென்னை போன்று அனைத்து இடங்களும் வளர்ச்சி அடைய 17 மினி டைடல் பார்க் உருவாக்கப் படுகிறது. கருநாடக மாநிலத்தில் பெங்களூரைத் தவிர வளர்ச்சி இல்லை. ஆனால் தமிழ்நாடு அப்படி இல்லை. எல்லா இடங்களிலும் பரவலான வளர்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.
