மும்பை மாநாட்டில் தமிழ்நாட்டுப் பேராளர்களை நன்றாக உபசரித்திருக்கிறீர்கள்!
தமிழ்நாட்டில் இருந்தாலும், மராட்டியத்தில் வசித்தாலும், இருவரும் சமூகநீதிக்காக குரல் எழுப்புகின்ற ஒரு குடும்பமாக இருக்கிறோம்
மாநாட்டுக்காக உழைத்த அத்தனை தோழர்களுக்கும் எங்களது தலை தாழ்ந்த நன்றிகள்!
மும்பை.ஜன.6 “திராவிடர் இயக்கம் மகாராட்டிராவின் சமூக அரசியலை இன்று நேற்று அல்ல, சுமார் நூறு ஆண்டுகளாக பேசியும் எழுதியும் வருகிறது என்றும், ஜோதிராவ் ஃபூலே இத்தகைய சிந்தனைகளை 200 ஆண்டுகளுக்கு முன்பே மராத்தி மண்ணில் விதைத்திருக்கிறார்” என்றும், இரண்டாம் நாள் மராத்தி மொழி அமர்வாக நடைபெற்ற இறுதி அமர்வில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மும்பை மாநாடு
மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர்கள் இணைந்து நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா இரண்டு நாள் மாநாட்டின் நிகழ்ச்சிகள் வில்லேஜ் ரோடு பாண்டூப் (மேற்கு) பகுதியில் உள்ள பிரைட் உயர்நிலைப் பள்ளியில் கல்வித்தந்தை தேவதாசன் அரங்கத்தில், இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (4.1.2026) அன்று மாலை 6:30 மணியளவில் மராத்தி மொழி அமர்வாக நடைபெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் மாலை 6 மணியளவில் மாநாட்டு அரங்குக்கு வருகை தந்தார். தோழர்கள் மிகவும் எழுச்சிகரமான வரவேற்பை அவருக்கு வழங்கி மகிழ்ந்தனர். நிகழ்வு தொடங்கியது. மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன் அவர்கள் மராத்தி மொழியில் பேசி இரண்டாம் நாள் இரண்டாவது அமர்வை தொடங்கி வைத்தார். இந்த அமர்வில் பீமாராவ், சுதேஷ் கோடேராவ், மும்பை திராவிடர் கழக பொருளாளர் பெரியார் பாலா, ராஜாராம் பாட்டில் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். நிகழ்வை தொடங்கி வைத்த பகுத்தறிவாளர் கழகத்தின் மும்பை தலைவர் இரவிச்சந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் மராத்தி மொழியில் பேசப்பட்ட உரைகளை தமிழில் சுருக்கமாக மொழியாக்கம் செய்து உரையாற்றினர். நிகழ்வில் மராத்தியர்கள் ஏராளமாகக் கலந்து கொண்டு பார்ப்பனரல்லாதாரின் உரிமைகளைக் கோரும் சுயமரியாதை உரைகளை ஊன்றி கவனித்து எழுச்சிகரமான உணர்வு பெற்று கையொலி செய்து சிறப்பித்தனர். இறுதியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தலை தாழ்ந்த நன்றி
கழகத் தலைவர், “மும்பையில் இரண்டு நாள் மாநாடு மனநிறைவோடு நடைபெற்று முடிந்திருக்கிறது” என்றும், “தமிழ்நாட்டுப் பேராளர்களை நன்றாக உபசரித்திருக் கிறீர்கள்; பாதுகாத்திருக்கிறீர்கள்” என்றும், “மகளிர் ஏராளமாக கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறீர்கள்” என்றும் நெகிழ்ச்சியுடன் கூறி, “மாநாட்டுக்காக உழைத்த அத்தனை தோழர்களுக்கும் எங்களது தலை தாழ்ந்த நன்றிகள்” என்று நன்றிப்பெருக்குடன் தொடங்கினார். மேலும் அவர், “மகாராட்டிராவின் சமூக அரசியலை இன்று நேற்று அல்ல சுமார் நூறு ஆண்டுகளாக பேசியும் எழுதியும் வருகிறது திராவிடர் இயக்கம் என்றும், “அதற்கும் முன்பாகவே ஜோதிராவ் பூலே இத்தகைய சிந்தனைகளை 200 ஆண்டுகளுக்கு முன்பே மராத்தி மண்ணில் விதைத்திருக்கிறார்” என்றும் சுட்டிக் காட்டினார். தொடர்ந்து, “சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டலில் நடைபெற்ற ஆரிய ஆதிக்கத்தைக் கண்டித்து, 1927 ஆம் ஆண்டு, அதாவது 99 ஆண்டுகளுக்கு முன்பே நீதிக்கட்சி நடத்திய “ஜஸ்டிஸ்” பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த, சர்.ராமசாமி முதலியார், “மாவீரன் சிவாஜி” எனும் தலைப்பில் தலையங்கம் எழுதியதையும், தந்தை பெரியாரின் மாணாக்கரான, அறிஞர் அண்ணா, “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” எனும் தலைப்பில் எழுதிய புத்தகத்தை குறிப்பிட்டும், திராவிடர் இயக்கம் இன்று நேற்று அல்ல நூற்றாண்டுகளுக்கு முன்பே மராத்தி மண்ணில் நடைபெற்ற சமூக அரசியலில் அக்கறை செலுத்தியதை சுட்டிக்காட்டியும் பேசினார். தொடர்ந்து, “நாங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறோம். நீங்கள் மராட்டியத்தில் இருக்கிறீர்கள். ஆனால், இருவரும் சமூகநீதிக்காக குரல் எழுப்புகின்ற ஒரு குடும்பமாக இருக்கின்றோம்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே குறிப்பிட்டார். அதை மேலும் பலப்படுத்தும் நோக்கத்திற்காக, “எது நம்மை இணைக்கிறதோ அதை அகலப்படுத்துங்கள். எது நம்மை பிரிக்கிறதோ அதை அலட்சியப்படுத்துங்கள்” கூறி, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எப்படி ஒன்றுபட்டு இருப்பது என்பதற்கான ஒரு சுலபமான; கடைப்பிடிக்கக் கூடிய இலக்கணத்தை; ஓர் ஆழமான கருத்தை மராத்தி மக்கள் முன் எடுத்து வைத்தார்.
உழைப்பு வீண் போகாது
மேலும் அவர், 1.3.1929 இல், “சமாஜ் சமத்துவ சங்கம்” சார்பில் மகாராட்டிராவில், “சுயமரியாதை மாநாடு” நடந்தது பற்றியும், அதில் அம்பேத்கர் கலந்து கொண்டு பேசியதும், அந்த மாநாட்டில் 5000 மகளிர்கள் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள்” என்றும், “இந்தத் தகவல் தந்தை பெரியார் நடத்திய, “ரிவோல்ட்” பத்திரிக்கையில் இருக்கிறது” என்றும், “சத்ரபதி சிவாஜியை பார்ப்பனர்கள் வஞ்சித்தது போல், சாகு மகராஜ் அவர்களையும் வஞ்சித்தபோது அந்த சங்கராச்சாரியாரையே மாற்றி வேறு ஒருவரை நியமித்தவர் சாகு மகராஜ்” என்று வரலாற்றில் சுயமரியாதைக்கான கம்பீரமான பக்கங்களையும் புரட்டிக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “அந்தந்த மொழிகளின் பண்பாடுகள் வளர வேண்டும்” என்றும், “அம்பேத்கரை ஆரியம் கபளீகரம் செய்ய முயற்சிக்கிறது. அதை நாம் துணிச்சலுடன் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும், “இந்த இரண்டு நாள் மாநாட்டுக்காக உழைத்த நமது தோழர்களின் உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது” என்றும், “உரிமைகளை போராடித்தான் பெற வேண்டும்” என்றும், “அப்படிப் போராடி புதியதோர் சமூகநீதிச் சமுதாயத்தை படைத்துக் காட்டுவோம்” என்றும் சூளுரை செய்து, தமது உரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட 60க்கும் மேற்பட்ட பேராளர்கள், மும்பை திராவிடர் கழகம், மும்பை பகுத்தறிவாளர் கழகம், மராத்தியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிறைவு நிகழ்ச்சியை சிறப்பித்துக் கொடுத்தனர்.

இறுதி நிகழ்வுக்கு முன்னதாக மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் மாநாடு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவரான வி.சி.வில்வம் வேண்டுகோள் விடுத்தார். அதில் கழகத் தலைவரால் திராவிட பிஷப் என்று விளிக்கப்பட்ட மும்பை ரவிக்குமார், தமிழ்நாடு பகுத்தறிவாளர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கருத்துக்களை தெரிவித்தனர். தந்தை பெரியாரைப் பற்றிப் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரியார் பிஞ்சுகள் இனியன், நன்னன், சிறப்பாக களப்பணி ஆற்றிய மும்பையைச் சேர்ந்த பெரியார் பிஞ்சுகள் அறிவுமலர், செந்தமிழ் அரசி ஆகியோருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சார்பில் பயனாடை அணிவித்து பாராட்டப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு சென்ற கழக வெளியீடுகள் முழுவதும் விற்பனையாகிவிட்டன என்பதும் இந்த மாநாட்டின் வெற்றிக்கு ஒரு சான்று. இந்நிகழ்வில் மும்பை திராவிடர் கழகம், மும்பை பகுத்தறிவாளர்கள், மராத்தியர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற திராவிடர் கழகத் தோழர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இம்மாநாட்டை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.
