10 இலட்சம் மடிக் கணினிகள் வழங்கி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

லேப்டாப், பரிசுப் பொருள் கிடையாது; உலகத்தை நீங்கள் ஆளுவதற்காக உங்கள் கைகளுக்கு வந்திருக்கக்கூடிய வாய்ப்பு!
செலவுத் திட்டம் கிடையாது; எதிர்காலத் தலைமுறையினருக்கான முதலீடு இது!

சென்னை, ஜன. 6– லேப்டாப், பரிசுப் பொருள் கிடையாது; உலகத்தை நீங்கள் ஆளுவதற்காக உங்கள் கைகளுக்கு வந்திருக்கக்கூடிய வாய்ப்பு! இது செலவுத் திட்டம் கிடையாது; எதிர்காலத் தலைமுறையின் கல்வியில் செய்யப்படும் முதலீடு! மாணவச் செல்வங்களே, அறிவியலை உங்கள் கரங்களில் வழங்குவதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.1.2026) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்ய வளாகத்தில் உயர் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தில் 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இம்மகத்தான விழாவில் முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:–

மாணவர்களான உங்களைப் பார்க்கும்போது, எனக்குள்ளே புது ‘vibe’ வந்துவிட்டது. மடிக்கணினி வழங்குகின்ற இந்த நிகழ்ச்சிக்கு எதற்கு “உலகம் உங்கள் கையில்!” என்ற தலைப்பை வழங்கியிருக்கிறோம் தெரியுமா! இது வெறும் தலைப்பு இல்லை; அதுதான் உண்மை! எதிர்காலமே உங்கள் கையில் தான் இருக்கிறது! அதை உரக்கச் சொல்லி, உணர்த்துவதற்குத் தான் இத்தனை பேரும் இந்த விழாவிற்கு வந்திருக்கிறீர்கள்!

அப்படிப்பட்ட பெருமைமிகு விழாவில், வரவேற்புரை நல்கியிருக்கக்கூடிய துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி அவர்களே!

சிறப்புரை ஆற்றியிருக்கக்கூடிய Moon Man – மரியாதைக்குரிய அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களே!

‘உயர்கல்வித் துறை அமைச்சர் சகோதரர் கோவி.செழியன் உள்ளிட்ட அமைச்சர் பெரு மக்களே!

அதேபோல சிறப்பாக உரையாற்றி, இந்த நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்திருக்கக்கூடிய பொருளாதார அறிஞர் அரவிந்த் சுப்பிரமணியன் அவர்களே! நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்களே, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறப்பாக உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய சகோதரர் நடிகர் கார்த்தி உள்ளிட்ட கலைத்துறை சார்ந்த நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!

புத்தாண்டை புத்துணர்வுமிக்க, மாணவ சமுதாயத்துடன் தொடங்குவதே பாசிட்டிவ் எனர்ஜியைத் தருகிறது!

நெக்ஸ்ட் ஜெனரேஷனான உங்களை மனதில் வைத்துதான், இந்த மொத்த விழாவை யுமே ஏற்பாடு செய்திருக்கிறோம்! அதனால்தான், கல்விக் கண்காட்சியுடன் இணைத்து, இதை, அறிவு விழாவாக, கல்வி விழாவாக, எதிர்கா லத்திற்குத் தேவையான விழாவாக ஏற்பாடு செய்திருக்கிறோம்! இந்த விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து, சிறப்பு சேர்த்திருக்கக் கூடிய நம்முடைய அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!

ஏன், இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்து கிறோம்? ஏன், இதுபோன்று திட்டங்களைச் செயல்படுத்துகிறோம்? மாணவர்களை வளர்த்தெடுத்தால்தான் மாநிலம் வளரும்! நாடு வளரும்! அதனால் நம்முடைய ஆட்சியில், “நான் முதல்வன்”, “புதுமைப்பெண்”, “தமிழ்ப் புதல்வன்” இப்போது இந்த லேப்டாப் திட்டம்!

இந்த மேடையில் நீங்கள் லேப்டாப் பெறுவது போலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆங் காங்கே நம்முடைய அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வழங்கிக் கொண்டிருக்கி றார்கள்!

அறிவியலை உங்கள் கரங்களில் வழங்குவதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி!

இன்றைக்கு சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வளர்ந்து, ஒட்டுமொத்த உலகத்தையும் நம்மு டைய கைகளுக்கு எட்டும் தொலைவுக்குக் கொண்டு வந்துவிட்டது! அதை உங்கள் கைகளுக்கே கொண்டு வந்து வழங்குவதுதான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி!

நூறு அல்ல; ஆயிரம் அல்ல; 20 இலட்சம் லேப்டாப்–களை இளைய சமுதா யத்துக்கு வழங்கப் போகிறோம்! அதன் முதல்கட்டமாகத்தான், இன்றைக்கு பத்து இலட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கத் தொடங்கி இருக்கிறோம்!

திராவிட இயக்கம் என்பது, அறிவியக்கம்! அறிவுக்கு முக்கியத்துவம் வழங்குகின்ற இயக்கம்! அதனால்தான், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை, அடுத்தடுத்த தலை முறைகளுக்கு உடனடியாக, உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்று நம்முடைய ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!

எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன் – 25 ஆண்டுகளுக்கு முன்பே, ‘இனிவரும் காலம் தொழில்நுட்பக் காலம், கம்ப்யூட்டரின் காலம்’ என்று உணர்ந்து அய்.டி. பாலிசி, ‘டைடல் பார்க்’ என்று கொண்டு வந்தார் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்! அதனால்தான், நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், உலகளவில் சாஃப்ட்வேர் ஃபீல்டில் டாப் பொசிஷன்ஸில் இருக்கிறார்கள்!

தமிழர்களான நாம் எப்போதும் கடந்த காலப் பெருமைகளையும் பேசுவோம்! எதிர்காலப் பெரு மைகளுக்காகவும் உழைப்போம்! ஒருபோதும், போலிப் பெருமைகளைப் பேசி தேங்கிட மாட்டோம்! அதற்கு ஓர் உதாரணம்தான் இந்த விழா!

எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், உங்களின் திறனும், பகுத்தறிவும், அறிவியல் பார்வையும் ஊக்குவிக்கப்பட்டால்தான், புது புதுக் கண்டுபிடிப்புகள் நிகழும்! தொழில்நுட்பம் வளரும்!

மனிதர்களுக்குக் காலம் கொடுத்த
இரண்டாவது நெருப்பு, ஏ.அய். தொழில்நுட்பம்!

மனித இனம், நெருப்பையும், சக்கரத்தையும் கண்டுபிடித்த காலத்தில், இதுபோதும், இவ்வளவுதான் நமக்கு தெரிந்தது என்று சுணங்கி இருந்தால், இப்போது விண்வெளியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்ற அளவுக்குச் சாதனைகள் படைத்துக் கொண்டிருக்க முடியுமா? நிச்சயம் முடியாது! மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கின்ற இரண்டாவது நெருப்புதான், ஏ.அய். அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத்தான் இன்றைக்கு உங்கள் கைகளில் லேப்டாப் வழங்கியிருக்கிறோம்!

என்னைப் பொறுத்தவரைக்கும், என்னுடைய எண்ணம் எல்லாம் என்ன தெரியுமா, நீங்கள் என்ன படிக்கிறீர்கள், எத்தனை டிகிரி வாங்குகிறீர்கள்? என்ன வேலைகளில், எவ்வளவு பெரிய உயர்பொறுப்புகளில் இருக்கிறீர்கள்? சக்சஸ்ஃபுல்லாக, சொந்தமாக தொழில் நடத்துகிறீர்களா, உங்களால் எத்தனை பேருக்கு வேலை வழங்க முடிகிறது, உங்களுடைய வளர்ச்சியால் நீங்கள் இந்தச் சமுதாயத்திற்கு என்ன செய்வீர்கள்? என்ற எண்ணம்தான் எனது நெஞ்சில் மேலோங்கி நிற்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இன்றைக்கு இருக்கின்ற இளைய சமுதாயம், மதிப்புமிக்க மனிதர்களாக, பெருமைமிக்க மனிதர்களாக, உயர்ந்து நிற்க வேண்டும்! எல்லோரையும் வாழ வைக்க வேண்டும்! இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் எண்ணம்!

இன்றைக்குஉங்கள் கைகளுக்கு வந்திருக்கின்ற லேப்டாப், பரிசுப் பொருள் கிடையாது; உலகத்தை நீங்கள் ஆளுவதற்காக உங்கள் கைகளுக்கு வந்திருக்கக்கூடிய வாய்ப்பு! எங்களைப் பொறுத்தவரை, இது செலவுத் திட்டம் கிடையாது; எதிர்காலத் தலைமுறையின் கல்வியில் செய்யப்படும் முதலீடு! நீங்கள் படிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம். படித்து, உங்கள் எதிர்காலத்தை, வாழ்க்கைப் பாதையை, நல்ல பாதையாகத் தேர்ந்தெடுங்கள்!

களத்தில் நிலைத்து நிற்க –
தொழில்நுட்ப அறிவு அவசியம்!

3 ஆண்டுகள் – 4 ஆண்டுகள் படிக்கின்ற டிகிரி மட்டுமே போதும் என்று நினைத்துவிடக் கூடாது. அனைத்துத் துறைகளிலும் தினமும் நிறைய வளர்ச்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதனால், டிகிரிபடிப்பதோடு, அப்கிரேட் ஆகின்ற டெக்னாலஜிக்கு ஏற்றது போல, நீங்கள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்க வேண்டும்!

இனிமேல், டெக்னாலஜியைப் படிப்பது என்பது ஆப்ஷன் கிடையாது; உங்கள் ஃபீல்டில் நீங்கள் நிலைத்து நிற்பதற்கு அவசியமாக இருக்கிறது! தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் நுழைந்துவிட்டது! எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோருடைய கைகளுக்கும் அது வந்துவிட்டது! அதை முறையாகப் பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும். ஆனால் நான் ஒன்று சொல்கிறேன் – ஏ.அய்.–ஆல் ஒருபோதும் மனிதர்களை நாம் ரீ–பிளேஸ் செய்ய முடியாது! நம்முடைய வேலைகளை இன்னும் விரைவாகச் செய்வதற்கும், இன்னும் சிறப்பாகச் செய்வதற்கும் தான் ஏ.அய். துணை நிற்கும்! ஸ்கில் அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் நிறைய உருவாகியிருக்கிறது! அதையெல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்!

சென்ற ஜெனரேஷன் இளைஞர்கள், அறிவுக்காக, பல புத்தகங்களைத் தேடி அலைய வேண்டும். ஆனால், இப்போது உங்களுக்குத் தேவையான தகவல்களை, அறிவை, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இருந்த இடத்தில் இருந்து கொண்டும் அதை நீங்கள் பெறலாம்! இந்த வளர்ச்சியைக் குறைசொல்லி முடங்கிப் போவது முட்டாள்களுடைய பாதை! இதைப் பயன்படுத்தி வாழ்க்கையின் உச்சத்தைத் தொட வேண்டியதுதான் உங்களுடைய வேலை!

இன்றைக்கு உங்கள் கைகளில் வந்திருக்கின்ற லேப்டாப்பை – வெறுமனே படம் பார்க்க, கேம்ஸ் விளையாட, பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்களா? இல்லை, உங்கள் கரியருக்கான லாஞ்ச்–பேட்–ஆக பயன்படுத்திக் கொள்ள போகிறீர்களா? இதுதான் நாங்கள் உங்கள் முன்னால் வைக்கக்கூடிய கேள்வி! எல்லாவற்றுக்குமே நல்லது, கெட்டது என்று இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. அதில் நீங்கள் எந்தப் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதைப் பொறுத்துதான் வெற்றி உங்கள் பக்கம் வரும்! நான் சொல்வதெல்லாம், உங்கள் கரியர் எதுவாக இருந்தாலும், அதில் நீங்கள்தான் டாப் பொசிஷனில்இருக்கவேண்டும்! வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில், நாம் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது, உங்களுடைய வெற்றியைச் சொல்லி, நீங்கள் மகிழ்ச்சி அடையவேண்டும்; அதில்தான் நான் பெருமைப்பட வேண்டும்!

உலகத்தோடு போட்டி போடுங்கள்.. அந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான கருவியைத்தான், இன்றைக்கு உங்கள் கைகளில் வழங்கியிருக்கிறோம்!

வெற்றி உங்களுக்காகக் காத்திருக்கிறது. நான் எப்போதும் சொல்வதுதான் – நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். படியுங்கள், படியுங்கள், படியுங்கள். உங்களைப் பார்த்துக் கொள்வதற்கு நான் இருக்கிறேன். உங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. பணம்தேவைப்படுகின்ற உங்கள் அம்மாக்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருகிறோம். படிப்பதற்குத்தேவையென்றால் மாணவர் களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய். மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய். பொங்கல் கொண்டாடுவதற்கு மூவாயிரம் ரூபாய் வழங்குகிறோம். பசியோடு காலையில் பள்ளிகளுக்கு வருகின்ற குழந்தைகளுக்கு காலை உணவு தருகிறோம். வேலை கிடைப்பதற்கு உலக அளவில் சென்று தொழிற்சாலைகளைக் கொண்டு வருகிறோம். மொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், பொருளாதாரத்தைப் பாருங்கள்! இரட்டை இலக்க வளர்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறோம்.

அதனால்தான், இங்கே இருக்கக்கூடிய உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, உலகப் பத்திரிகைகளே நம்முடைய தமிழ்நாட்டை இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ஸ்டேட் என்று சொல்கிறார்கள். இது எல்லாம் போதுமா! சொல்லுங்கள் போதுமா! (“போதாது” என மாணவ – மாணவியர் பலத்த குரல் எழுப்பினர்) கண்டிப்பாகப் போதாது! இன்னும் வளர்ச்சி வேண்டும். தமிழ்நாடு உங்களை நம்பித்தான் இருக்கிறது. உலகம் உங்கள் கையில் இருக்கிறது. ஜெயித்துவிட்டு வாருங்கள். நீங்களும் ஜெயித்து வாருங்கள். நாங்களும் ஜெயித்துவிட்டு வருகிறோம். எப்போதுமே உங்கள் கூடவே இருப்போம்! தமிழ்நாடு வெல்லட்டும்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *