சென்னை, ஜன. 5- தமிழ்நாட்டில் இன்று முதல் ஜன.10ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு கிறது. தென்கிழக்கு மற் றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜன.5), மறுதினமும் கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 7ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், 8ஆம் தேதி கடலோர தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், 9ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், 10ஆம் தேதி தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். தென் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜன.8ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
