2024-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. அதேசமயம் ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்றுவதற்கான கோரிக்கை அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே பக்கத்தில் நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, 2011-இல் சமூக, பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்தக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடவும், அதன டிப்படையில் ஜாதிகளுக்கான இடஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகள் ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பீகாரில் ஆளும் ‘மகாத்பந்தன்’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அய்க்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் நாமும் வலியுறுத்தி வருகிறோம்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் இதை வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் கருநாடகாவின் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட இதர பிற்படுத் தப்பட்டோர் கணக்கெடுப்பு விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். ஆனால் பிரதமர் மோடி இதனை ஒரு போதும் செய்யமாட்டார். பிரதமர் மோடிக்கு இதர பிற்படுத்தப் பட்டோர் (ஓபிசியினர்)மீது அக்கறை இல்லை. ஆனால் காங்கிரஸ் அரசு நிச்சயம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடும்” என்றார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பா.ஜ.க. தனது வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க இந்துத்துவா கொள்கையைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்றுவது ஆகியவை 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முக்கிய கேள்வியாக மாறி யிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1872-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1931-ஆம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்திய ஒவ்வொரு முறையும் அதில் ஜாதி தொடர்பான தகவல்களும் பதிவு செய்யப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1951 ஆம் ஆண்டு தனது முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தியபோது, தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் மட்டுமே ஜாதியின் பெயரால் வகைப்படுத்தப்பட்டனர்.
1980களில் ஜாதி அரசியலை அடிப்படையாகக் கொண்ட பல மாநில கட்சிகள் தோன்றியபோது நிலைமை மாறியது.
அரசியலில் உயர்ஜாதியினர் என்று அழைக்கப்படுபவர்களின் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் இந்தக் கட்சிகள், தாழ்த்தப்பட்ட ஜாதியினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கின.
சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய இந்திய அரசு 1979 ஆம் ஆண்டில் மண்டல் ஆணையத்தை அமைத்தது.
ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால் இந்தப் பரிந்துரை 1990 ஆம் ஆண்டு தான் செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுப்பிரிவு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் இடஒதுக்கீட்டுடன் இணைக்கப்பட்டதால், அரசியல் கட்சிகள் அது தொடர்பான கோரிக்கையை அவ்வப்போது எழுப்பத் தொடங்கின. இறுதியாக 2010இல், ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோரியபோது, அப்போதைய காங்கிரஸ் அரசு சம்மதித்தது. சமூக-பொருளாதார – ஜாதிக் கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்பட்டது. ஆனால் இதன் மூலம் பெறப்பட்ட ஜாதி தொடர்பான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இதேபோல் கருநாடகாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதில் பெறப்பட்ட தரவுகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மாநில அரசு கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கியது.
இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ள இந்தப் பணியின் முதல் கட்டத்தை மே 31-ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில், பீகாரில் வசிக்கும் மக்களின் ஜாதி, துணை ஜாதி மற்றும் சமூக-பொரு ளாதார நிலை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும். பீகார் அரசு நடத்தும் இந்த ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக் கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு, அதே நேரத்தில் அதன் கணக்கெடுப்பை மறுதலிப்பது பிஜேபியின் மலிவான அரசியலே! உயர்ஜாதி ஆதிக்கம் வெளிச்சத்துக்கு வந்து விடுமோ என்ற அச்சமும்கூட.