ஆர்.எஸ்.எஸ்.ஸா – ஹிந்துக்களின் கோயிலா? என்ற ஒரு கேள்வியை எழுப்பினால், கோயில் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் – முதல் உரிமை ஆர்.எஸ்.எஸ்.சுக்குத்தான் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.
சமீபத்தில் இந்தியத் தலைநகரமான டில்லியில் பல அடுக்கு மாளிகை ஒன்றை பன்னூறு கோடி ரூபாய் செலவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்காகக் கட்டியுள்ளனர்.
ஆனாலும், வாகனங்களை நிறுத்த இடம் (Parking) இல்லாத நிலை!
என்ன செய்தார்கள் தெரியுமா?
800 ஆண்டுகாலமாக இருந்த ஹிந்துக் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டனர்.
இதுகுறித்து, நாட்டை ஹிந்துராஷ்டிரமாக்கப் போகிறோம் என்று கர்ச்சிப்பவர்களோ, இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் ஹிந்துத்துவா அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்களோ மெல்லிய குரலில்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
‘‘ஹிந்துக்களின் கோயில்களை இடித்துத்தான் இஸ்லாமியர்கள் மசூதிகளை எழுப்பினர்; அதில் முக்கியமானது அயோத்தியில் உள்ள பாபர் மசூதி’’ என்று கூறி, ஒரு பட்டப் பகலில் பகிரங்கமாக பி.ஜே.பி. மற்றும் சங் பரிவார் பெருந்தலைவர்களின் நேரடி வழிகாட்டுதல்படி பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்.
அடுத்து தங்கள் இலக்கு வாரணாசி, மதுரா கோயில்களை அடுத்துள்ள மசூதிகள் என்று மார்தட்டுகிறார்கள்.
இப்படியெல்லாம் தங்களுக்குள்ளாகவே வசதிக்கும், ஆசைக்கும் ஏற்ப அகழ்வாராய்ச்சி செய்யும் சங் பரிவார்கள் இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.சின் புதிய கட்டடத்துக்கு முன் வாகனங்களை நிறுத்த இடம் இல்லையென்று கூறி, 800 ஆண்டுகால ஹிந்துக் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர் என்றால், இதன் பொருள் என்ன?
ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம் மீண்டும் ஓர் ஆரிய ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்தவே தவிர, வேறு எந்த வெங்காயமும் கிடையாது என்பதைத் திடமாக ஹிந்துத்துவாவுக்கு வால் பிடிக்கும் பார்ப்பனரல்லாதார் உணரவேண்டும்!
உணர்வாளர்களா?
எங்கே பார்ப்போம்!
– மயிலாடன்
