சென்னை, ஜன.5 சட்டமன்றத் தேர்தலுக்கு, தி.மு.க., அளிக்கும் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை, மக்களுடன் இணைந்து உருவாக்கும் நோக்கில், கைப்பேசி செயலியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மக்களின் நேரடி கருத்துகளை பெற, இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் வாயிலாக, மக்கள் தங்களது கோரிக்கைகள், ஆலோசனைகளை பதிவு செய்ய முடியும். செயலியில் பெறும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை, தி.மு.க., அமைத்துள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆய்வு செய்து, பொருத்தமான அம்சங்களை, வாக்குறுதிகளாக சேர்க்க உள்ளனர்.
இச்செயலியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்த ஒரே நாளில், 14,318 கோரிக்கைகளும், பரிந்துரைகளும் பதிவாகியுள்ளன.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 2026இல் அமைய இருக்கும் தி.மு.க., அரசு, பெருவாரியான மக்களின் பங்களிப்புடன் அமைய வேண்டும் என, முதலமச்சர் மு.க. ஸ்டாலின் கருதுகிறார். எனவே, மக்களின் கருத்துகள், பரிந்துரைகளை பெறும் வகையில், மொபைல் கைப்பேசி எண், வலைதள விபரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் ஆகியவற்றை அறிமுகம் செய்தார்.
இந்நிலையில், ஒரே நாளில், மொபைல் கைப்பேசி வாயிலாக, 1,188; ‘வாட்ஸாப்’ வழியாக, 7,527; மின்னஞ்சல் வாயிலாக, 251; சமூக வலைதளம் மற்றும் இணையதளம் வழியாக 2,015; கியூ ஆர் கோடு வழியாக, 692; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக, 2,645 என, மொத்தம் 14,318 கோரிக்கைகள் பதிவாகி உள்ளன.
பி.ஜே.பி. ஆளும் டில்லியில்
வீடற்ற மக்களைக் காக்க
களம் இறங்கிய தன்னார்வ அமைப்புகள்!
களம் இறங்கிய தன்னார்வ அமைப்புகள்!
புதுடில்லி, ஜன.5 டில்லியில் குளிர் அலைதாக்கத்தால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இவர்களை காப்பாற்ற பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்காததால் தன்னார்வலர் அமைப்புகள் களம் இறங்கியுள்ளன.
மீட்புப் பணிகள்: டில்லியில் கடும் குளிர் நிலவுவதால், வீதிகளில் வசிக்கும் மக்களை மீட்க தன்னார்வ நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. ‘சென்டர் ஃபார் ஹோலிஸ்டிக் டெவலப்மென்ட்’ (CHD) இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோரை மீட்டு அரசு தங்குமிடங்களில் சேர்த்துள்ளது.
மருத்துவ உதவி: குளிரால் மூட்டு வலி மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்படும் முதியவர்களுக்கு ‘சேவா பவன்’ போன்ற அமைப்புகள் பிசியோதெரபி மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றன.
நிவாரணப் பொருட்கள்: ‘விஷ்ஸ் அண்ட் ப்ளெசிங்ஸ்’ அமைப்பு ‘6 வீக்ஸ் ஆஃப் வார்ம்த்’ என்ற திட்டத்தின் மூலம் போர்வை, ஸ்வெட்டர், சாக்ஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வருகிறது.
விழிப்புணர்வு: ‘ராஹ்கிரி அறக்கட்டளை’ போன்ற அமைப்புகள் இரவு நேரங்களில் மேம்பாலங்கள் மற்றும் நடைபாதைகளில் ரோந்து சென்று, அங்கு தங்கியிருப்பவர்களுக்கு உணவளிப்பதோடு அவர்களை தங்குமிடங்களுக்கு மாற ஊக்குவிக்கின்றன.
வானிலை: டில்லியில் குறைந்தபட்ச வெப்ப நிலை 7.4°C ஆக பதிவாகியுள்ளது. வரும் ஜனவரி 6 வரை கடும் குளிர் அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
