பல மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் ஒரு திரைப்படத்திற்குச் சென்றிருந்தோம். இளைஞர்களின் ‘மாஸ் ஹீரோ’ எனக் கொண்டாடப்படும் நடிகரின் படம் அது. கதையில் அந்த நாயகன், தான் காதலிப்பதாகக் கூறும் பெண்ணைத் துடிக்கத் துடிக்கக் கண்ணாடிக் குவளையால் அறுத்துக் கொடூரமாகக் கொல்லும் காட்சியப் பார்த்ததும் பதறினேன். மேலும், குழந்தைகளை மோசமாகச் சித்திரவதைப்படுத்தும் காட்சிகள் ஒளிபரப்பானபோது, திரையரங்கில் இருந்த குழந்தைகள் கதறி அழுதனர். காண்போரின் மனதை உலுக்கும் வன்முறைக் காட்சிகள்தான் பணம் சம்பாதிப்பதற்கான வழியா?
மனதில் பதியும் வன்முறைகள்
இதைப் போலவே வசூலில் சாதனை படைத்த இன்னொரு படத்தில், நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை கொல்லப்படுவதாகப் படமாக்கப்பட்டிருந்தது. கருவுறத் தகுதியான பெண்களை, குறிப்பாகப் பருவம் எய்திய இளம்பெண்களைச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்யும் காட்சிகளும் அந்தப் படத்தில் இருந்தன. படத்தின் பிற்பகுதி நேர்மறையான காட்சிகளோடு அமைக்கப்பட்டிருந்தாலும், முற்பாதி காட்சிகளின் தாக்கம் பல மாதங்களாகியும் என் மனதை விட்டு நீங்கவில்லை.
பெண்களின் ஆடைபற்றிய
கீழ்த்தரமான சிந்தனை
கீழ்த்தரமான சிந்தனை
திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும்தான்; அதை இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று தோழர்கள் பலர் சொல்வதுண்டு. ஆனால், இதைப் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சமூகத்தில் அதிகரிக்கக் காரணமாக அமைகின்றன. ஒரு பெண் அரைகுறை ஆடையணிந்து வந்து ஆடினால்தான், ஒரு படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறும் என்கிற சிந்தனையே எவ்வளவு கீழ்த்தனமானது? இவற்றைப்பார்த்துப் பார்த்து வளரும் ஆண்கள்தான், பேருந்தில் ஒரு பெண்ணின் ஆடை லேசாக விலகினாலும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மோசமாக நடந்துகொள்கின்றனர்.
ஒருதலைக் காதலை, மானசீகக் காதலாக மாற்ற முயலும் அயோக்கியத்தனங்களுக்கும் நம் திரைப்படங்களில் குறைவில்லை. கதாநாயகனின் காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்கள் வில்லியாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். தன்னை நிராகரிக்கும் பெண் மீது அமிலத்தை ஊற்றுவது, கொல்வது போன்ற கதாநாயகர்களுக்குப் பதிலாக, லட்சியத்தை நோக்கி நகரும் நல்ல குணமுள்ள கதாநாயகர்கள் இளம் தலைமுறையினர் மனங்களில் மாற்றத்தை விதைக்கலாம்.
சில மாதங்களுக்கு முன் சிறுவன் ஒருவன், ‘அடிடா அவளை.. வெட்றா அவளை’ என்ற பாடலுக்கு அபிநயம் பிடிக்கும் காணொலி இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருந்தது. இந்தச் சிறுவர்கள் நாளை எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்று அச்சமாக இருந்தது. திரைப்படத் துறையினர் நிறையவே பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
நன்றி: ‘இந்து தமிழ்திசை’ 4.1.2026
