‘ஜனவரி 6’ஆம் தேதி : முக்கிய நாள்
முனைவர் அதிரடி க. அன்பழகன்
மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்,
திராவிடர் கழகம்
மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்,
திராவிடர் கழகம்
30 ஆண்டு 3 மாதம் 13 நாள்கள் அய்யாவை அணுக்க மாய் பாதுகாத்திட்ட அன்னை மணியம்மையார், அய்யாவின் மறைவிற்கு பின் (24.12.1973) அய்யா தந்த இயக்கத்தை தலைமையேற்று பாதுகாக்கும் ஆகப்பெரும் பொறுப்பை ஏற்கும் நிலை உருவானது.
தந்தை பெரியார் இயக்கத்தை நடத்தினார். அன்னையார் அய்யாவை இமைப்பொழுதும் சோராது காக்கும் கடமையிலேயே கண்ணும் கருத்துமாய் இருந் தார். ஏச்சுகளையும் – இழி மொழிகளையும் சுமந்தார். தன் எதிர்கால வாழ்வை, இளமையை இயக்கத்திற்கே ஈன்றார்.
பொது நிர்வாகிகள்
மாநில கலந்துரையாடல் கூட்டம்
மாநில கலந்துரையாடல் கூட்டம்
தந்தை பெரியார் மறைந்து இருவார இடைவெளியில் 1974 – ஜனவரி 6 அன்று காலை 10.30 மணிக்கு திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில பொது நிர்வாகிகள் கூட்டம் இயக்கத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்கக் கூடியது.
இனி நடந்ததை அன்றைய கழகப் பொதுச் செயலாளர் – இன்றைக்கு கழகத்தின் தலைவர் மானமிகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இடியென தாக்கிய அய்யாவின் இறப்பை ஏற்க முடியாமல் – இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு இரத்தக் கண்ணீர் வடிக்க எழுதுவதை அப்படியே படியுங்கள்.
தந்தை பெரியார் இல்லாத கழக மாநில கலந்துரையாடல்
‘‘அறிவித்தபடி 6.1.1974 ஞாயிறு அன்று காலை திருச்சி பெரியார் மாளிகையில் ‘தந்தை பெரியார் கலந்துகொள்ளாத’ திராவிடர் கழக கலந்துரையாடல் கழக வரலாற்றில் முதல் முறையாக நடந்தது.
தொடக்கத்தில் பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய பின், கூட்டத்திற்கு அய்யா நம்முடன் இல்லாத நிலையில் அய்யாவால் அடையாளம் காட்டப் பெற்ற நம் அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையேற்று நடத்தித் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
அதனை கழகத்தின் மூத்த மாவட்டத்தலைவர்களில் ஒருவரான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தர்மபுரி மாவட்ட தி.க. தலைவர் எம்.என். நஞ்சய்யா, மதுரை மாநகர் தலைவர் ஓ.வி.கே. நீர்க்காத்தலிங்கம் ஆகியோர் ‘அம்மா அவர்கள் இந்தக் கூட்டத்திற்கு மட்டுமல்ல; கழகத்திற்கே தலைமை ஏற்று நடத்த வேண்டும்’ என்று வழிமொழிந்து உரையாற்றினார்கள்.
அவர்களைப் பின்பற்றி மாவட்டத்தலைவர்கள், கழக முக்கிய செயல் வீரர்கள் என 27 பேர்கள் உரையாற்றினர். பின்னர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கூட்டத்தில் பின்வரும் ஏழு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இதில் இரண்டு இரங்கல் தீர்மானங்கள் போக மற்ற தீர்மானங்கள் அய்ந்தும் – அய்யாவுக்குப்பின் அம்மாவின் தலைமை என்ற ஒரு புதிய அத்தியாயத்தைக் கழக வரலாற்றில் இணைத்தவை.
அவைகளில் மூன்றாவது தீர்மானம்: தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகு, திராவிடர் கழக தலைமைப் பொறுப்பிற்கு அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களை இக்கூட்டம் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கிறது.
ஏழாவது தீர்மானம்: ஜனவரி 16 முதல் 25 முடிய ‘உறுதிநாள்’ என்பதாக ஏற்பாடு செய்து தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகக் கூட்டங்கள் நடத்தி, அக்கூட்டங்களில் திராவிடர் கழகக் கொள்கைகளை விளக்கி கீழ்க்கண்ட உறுதிமொழியினைக் கூறி பொதுமக்கள் முன்னிலையில் கழகத் தோழர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
‘திராவிடர் கழகத்தவராகிய நாங்கள் தந்தை பெரியார் அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற பணியை அவர் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கு ஆளாகாமல் வென்று முடிப்போம் என உறுதி எடுத்துக் கொள்கிறோம்.’
இந்த ஏழாவது, தீர்மானம் உறுதி ஏற்புத் தீர்மானம் ஆகும். இனி வருங்காலத்திலும் வழிகாட்டும் கலங்கரை விளக்க வெளிச்சம் போன்று கட்டுக்கோப்புடன் கழகம் கடமையாற்றிடும் என்பதை இந்தப் பரந்த பூமிப் பந்திற்குப் பிரகடனப்படுத்திய செயல்திட்ட விளக்கச் செப்பேடு ஆகும்.
‘தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்’ இது கழகத் தலைவரின் சூளுரைப் பிரகடன மாகும்.’’
மேற்கண்டவாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தான் எழுதிய ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ பாகம் 4–இல் வடித்துள்ள வரலாற்றுச் செய்தியைத்தான் உங்கள் பார்வைக்கும் –சிந்தனைக்கும் செயலாக்கத்திற்கும் தரப்பட்டுள்ளது.
உலகின் முதல் வீராங்கனை
6.1.1974 நாளில் தான் நம் அன்னை மணியம்மையார் உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத்திற்கு தலைமை ஏற்ற முதல் வீராங்கனை என்ற சிறப்புடன் தலைவரானார்.
அய்யா – அம்மா வழியில் இன்று 93ஆம் அகவையில் ‘உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம்’ எனும் புரட்சி முழக்கத்தோடு – புதியதோர் சுயமரியாதை உலகின் மாதிரியை – சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை தொடர்ந்து படைத்திடும் பணியில் பெரியார் பெரும் பணிக்கு தலைமையேற்று, உலகச் சாதனை படைக்க உலகை வலம் வரும் தமிழர்தலைவரின் ஆணையை நிறைவேற்றுவோம். அய்யா – அம்மா புகழ் பரப்புவோம் – பெரியார் உலகம் படைப்போம்.
