திருவனந்தபுரம், ஜன. 5- சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணாமல் போன தங்கம், அய்க்கிய அரபு எமிரேட்சின் துணை தூதரகம் மூலம் வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டிருக்கலாம் என, சி.பி.அய்., சந்தேகிக்கிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கேரளாவின் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில், 2019இல் புனரமைப்பு பணிகள் நடந்தன. கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கக் கவசங்கள் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
வழக்குப்பதிவு
தங்கமுலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கும்போது, துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் இருந்து 4 கிலோ தங்கம் காணாமல் போனது தெரியவந்தது. கருவறை கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவிலை நிர்வகிக்கும் திரு விதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் தேவசம் போர்டு மேனாள் தலைவர், நிர்வாக அதிகாரி உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சபரிமலை உட்பட தென் மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் இருந்து திருடப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்தும் ஒரு கும்பல் கேரளாவில் செயல்பட்டு வருவதாகக் கூறும் ஆதாரங்கள் வெளிவந்தன.
முன்னதாக, திருவனந்தபுரத்தில் உள்ள அய்க்கிய அரபு எமிரேட் சின் துணை தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல்களில் சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதற்கு அத்தூதரகத்தின் மேனாள் ஊழியர்களான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் பி.எஸ்.சரித் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
விசாரணை இதன்படி, சபரி மலை அய்யப்பன் கோவில் தங்கம், வெளிநாடுகளுக்கு கடத்தப் பட்டிருக்கலாம் என சி.பி.அய்.,க்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மேனாள் துாதரக ஊழியர்களிடம் சி.பி.அய்., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
இவர்களுடன், அமலாக்கத்துறை, சுங்கத்தடுப்புப் பிரிவின் பொருளா தார குற்றப்புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறுதியான ஆதாரங்கள் கண்டறியப்பட்டால், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் என, தெரிய வந்துள்ளது.
