பத்மசிறீ மருத்துவர் வி.எஸ்.நடராஜன்
முதியோர் நல மருத்துவர், சென்னை
நல்ல தூக்கம் வர
- தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இரவில் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
- அதேபோல், காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கமும் மிகவும் அவசியம்.
- படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் சற்று மங்கிய வெளிச்சத்தில் இருக்க வேண்டும்.
- தூக்கத்தைக் கெடுக்கும் மாத்திரை மற்றும் பானங்களை இரவில் தவிர்க்க வேண்டும். (உ.ம்) நீர் மாத்திரை. காபி, டீ, மது, புகைபிடித்தல்,
- மாலையில் செய்யும் உடற்பயிற்சி நல்ல உறக்கத்தை இரவில் ஏற்படுத்தும்.
- பகலில் தூக்கம் 30 – 40 நிமிடங்கள் போதுமானதே.
- படுக்கும் இடத்தை தூக்கத்திற்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும். இரவில் படுத்துக்கொண்டே படிப்பது அல்லது தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வற்றை தவிர்ப்பது நல்லது.
- படுத்தவுடன் 30 – 45 நிமிடங்களில் தூக்கம் வர வில்லையென்றால், படுக்கையைவிட்டு எழுந்து சற்று நடந்துவிட்டு வரலாம் அல்லது அடுத்த அறைக்குச் சென்று படிப்பது, வானொலி கேட்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவது நல்லது. தூக்கம் வர ஆரம்பித்த உடனேயே படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும்.
- படுப்பதற்கு முன்பு சிறிதளவு வெதுவெதுப்பான பால் அருந்துவது தூக்கத்திற்கு நல்லது.
- மன உளைச்சல்களும், கவலைகளும் தூக்கத்தின் முக்கிய எதிரிகள். அதை தவிர்ப்பது மிக அவசியம். இதற்கு தியானம் மிகச் சிறந்த மருந்தாகும்.
தூக்கத்திற்கு மாத்திரை ஏதேனும் உண்டா?
நல்ல தூக்கத்திற்கு தூக்க மாத்திரை ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. தூக்க மாத்திரையை தினமும் சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் விளைவிக்கும்.
மாத்திரையின் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். மாத்திரையை திடீரென்று நிறுத்தினால், தூக்கம் பாதிக்கப்படும். தூக்க மாத்திரையினால் ஞாபகசக்தி குறையும், உடல் தடுமாறும், கீழே விழ வாய்ப்புகள் அதிகமாகும். பகலில் மயக்க நிலையை ஏற்படுத்தும். ஆகையால், முடிந்த அளவிற்குத் தூக்க மாத்திரையைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப் பெற்று தூக்க மாத்திரையைச் சாப்பிடுவது நல்லது.
