சென்னை, ஜன.4 தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம். நல்லமுடிவு எடுப்போம் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.
‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதிமுதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில், 9-ஆவது நாளாக கல்வித்துறை தலை மையகமான டிபிஅய் வளாகத்தில் நேற்று (3.1.2026) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டம் குறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறோம். கடந்த தேர்தலின்போது எங்கள் கோரிக்கையை ஏற்ற தி.மு.க., அதை தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவித்தது. ஆனால், இன்னும் நிறைவேற்றவில்லை. ஊதிய முரண்பாடு களையப்படாவிட்டால், பள்ளிகள் திறந்த பிறகும் போராட்டம் தொடரும். தமிழ்நாடு அரசு எங்களை அழைத்துப் பேசிகோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.
விரைவில் நல்ல முடிவு
இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்று (3.1.2026)செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தொடர் போராட்டத்தில் ஈடு பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் என் குடும்ப உறுப்பினர்களை போன்றவர்கள். அவர்களை நாங்கள் கைவிட மாட்டோம். நாங்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். போராட்டம் நடத்துபவர்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள். விரைவில் நல்ல முடிவை எடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஆசிரியர்களின் செயலை போராட்டமாகவோ, ஆர்ப்பாட்ட மாகவோ நான் பார்க்கவில்லை. தங்கள் உணர்வுகளை வெளிப் படுத்தும் விதமாகவே ஆசிரியர்கள் போராடுகிறார்கள்’’ என்றார்.
