சென்னை, ஜன.4 கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நேற்று (3.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்புத் துறை நிலைய அலுவலர்களுக்கு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
இரும்புக்கரத்தை பயன்படுத்துங்கள்
தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம், அமைதிப் பூங்கா என்று இந்திய அளவில் எல்லோரும் சொல்கின்றனர். முதலீடுகளை மேற்கொள்ளச் சிறந்த இடம் என்று உலக அளவிலான நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேடி வருகின்றன. இந்த நம்பிக்கையைப் புதிதாகப் பணியில் சேர்ந்திருக்கக்கூடிய நீங்களும் காப்பாற்ற வேண்டும்.
ஒரு காவலர் நல்லது செய்யும் செய்தி ஊடகங்களில் வரும்போது, ஒட்டுமொத்த துறைக்கே பெருமையைத் தேடித் தருகிறது. அதேபோல, எங்கோ ஒரு காவலர் தவறு செய்தாலும், ஒட்டுமொத்த துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதிக்கும். அதை உணர்ந்து நீங்கள் ஒவ்வொருவரும் கவனமாகச் செயல்பட வேண்டும்.
குற்றத்தைத் தடுப்பதில் இரும்புக் கரத்தைப் பயன்படுத்துங்கள். புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதை, அக்கறையுடன் நடந்து கொள்ளுங்கள். பெண்கள், குழந் தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போது, மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். இது 100 சதவீதம் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய உத்தரவு.
சட்டம் ஒழுங்கு சமரசமின்றி…
போதைப்பொருட்கள் நடமாட்டம், விற்பனையை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். போதை எனும் ஆபத்து நம் வீட்டுக் குழந்தை களையும் பாதிக்கும் என்று உணர்ந்து, தனிப்பட்ட ஈடுபாட்டுடன் நீங்கள் செயல்பட வேண்டும். “நான் பொறுப்பில் இருக்கும் பகுதியில், என்னை மீறி ஒரு குற்றமும் நடக்க விடமாட்டேன்” என்று நீங்கள் ஒவ்வொருவரும் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். இரவு பகல் பார்க்காமல் நீங்கள் பொறுப்பாகப் பணியாற்றுகிறீர்கள் என்ற நம்பிக்கையில்தான், நான் உட்பட அனைவருமே எங்கள் பணிகளை நிம்மதியாக மேற்கொள்கிறோம். எனவே, காவல் துறையின் முக்கியத்துவம், வேலையின் பொறுப்பு, காக்கி உடையின் மரியாதையை உணர்ந்து மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்.
சட்டம் – ஒழுங்கைச் சமரசமில் லாமல் நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகா னந்தம், உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் வெங்கடராமன், தீயணைப்புத்துறை இயக்குநர் சீமா அகர்வால், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
