சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன.4 ‘‘மூட நம்பிக்கை களுக்கும், தவறான எண்ண ஓட்டங்களுக்கும் அதிகாரிகள் அடிபணிந்து போகக்கூடாது’’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, எண்ணூர், நெட்டுக்குப்பம் பஜனை கோயில் தெருவில் வசித்து வரும் கார்த்திக் என்பவர், தனது வீட்டில் விநாயகர், சிவசக்தி, தஷீஸ்வரி, வீரபத்திரன் உள்ளிட்ட சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வந்தார். அவர் நடத்தும் பூஜைகளில் அண்டை வீட்டாரும் பங்கேற்று வந்தனர்.
இந்நிலையில், அவர் தனது வீட்டில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்திய பிறகு அப்பகுதிகளில் சிலர் திடீரென மரணமடைந்து வருவதாகக் கூறி அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் அவருடைய வீட்டில் இருந்து சிலைகளைகாவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிலைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவுப்படி அதிகாரிகள் இன்னும் தன்னிடம் சிலைகளை ஒப்படைக்கவில்லை எனக்கூறி கார்த்திக், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. இதற் கிடையே சிலைகள் மனுதாரரிடம் ஒப்படைக் கப்பட்டன.
நடவடிக்கை
அதையடுத்து அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த நீதிபதி, தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் தனது வீட்டில் அனு மதியின்றி கோயில் கட்டியிருந்தால், அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். உண்டியல் வைத்து காணிக்கை வசூலில் ஈடுபட்டாலும், அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில் அதிகாரிகள் மூடநம்பிக்கை களுக்குத் துணை போகக் கூடாது.
இவ்வாறு நீதிமன்ற உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
