சென்னை, ஜன.3– ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு முழுவதும் ஒற்றை பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து தீவிர சோதனையை நடத்தி வருகிறது.
தெருவோர வியாபாரிகள், கடைகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு தொழிற்சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் சோதனையை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் 9,248 கடைகளில் நடைபெற்ற சோதனையில் 2,553 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. 15.56 டன் தடை செய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த நபர்களுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது.
ஒற்றை பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் தயாரிப்பில் ஈடுபட்ட 290-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்தில் 13 தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளன.
இதுதான் பிஜேபி!
திருப்பூரில் காவலரை தாக்க முயன்ற பா.ஜ.க. நிர்வாகி கைது
திருப்பூர், ஜன.3- மது போதையில் திருப்பூரில் பணியில் இருந்த காவலரை தாக்க முயன்ற பா.ஜ.க. வடக்கு மாவட்ட பிரச்சார அணி செயலாளர் செல்வம் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மங்கலம் சாலை எஸ்.ஆர்.நகர் பகுதியைசேர்ந்தவர் செல்வம். இவர் பாஜக வடக்கு மாவட்ட பிரச்சார அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் வீட்டிலிருந்து நடந்து சென்று மங்களம் சாலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சென்ற செல்வம் மது போதையில் தனக்கு தெரிந்தவர்கள் இவர்களை விடுங்கள் என காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் வாகன தணிக்கையின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் இருந்த தலைக் கவசத்தை எடுத்து அங்கு பணியில் இருந்த கருப்பையா என்ற காவலரை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.
அருகில் இருந்த மற்ற காவல் துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த தலைக் கவசத்தைப் பிடுங்கி வைத்துக் கொண்டு அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காவலர் கருப்பையா அளித்த புகாரின் பேரில் பணியில் இருந்த காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த செல்வத்தின் மீது வழக்கு பதிவு செய்து திருப்பூர் மத்திய காவல் துறையினர் நேற்று (2.1.2025) அவரை கைது செய்துள்ளனர். பணியில் இருந்த காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து மதுபோதையில் அவர்களை பிஜேபி வடக்கு மாவட்ட பிரச்சார அணி செயலாளர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் விழா
தென்மாவட்ட மக்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
சென்னை, ஜன. 3- தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே தற்போதே விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுடன் சேர்த்து, இந்த ஆண்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு நெரிசலைக் குறைக்க பின்வரும் முக்கிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை எழும்பூர் – திருநெல்வேலி: தாம்பரம் வழியாக இயக்கப்படும் அதிவேக சிறப்பு ரயில்கள். சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி: மதுரை மற்றும் நாகர்கோவில் வழியாக விடுமுறை கால நெரிசலைத் தவிர்க்க வாராந்திர மற்றும் தினசரி ரயில்கள். கோவை – சென்னை: மேற்கு மாவட்ட பயணிகளின் வசதிக்காக பகல் நேர வந்தே பாரத் மற்றும் கூடுதல் சிறப்பு ரயில்கள். முன்பதிவு குறித்த முக்கியத் தகவல்கள்
பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகள் (Extra Coaches) இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடைசி நேர பயணிகளுக்காக தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் வசதிகள் அந்தந்த தேதிகளுக்கு முந்தைய நாள் காலை 10 மணி (ஏசி) மற்றும் 11 மணிக்கு (ஸ்லீப்பர்) தொடங்கும்.
“பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் அங்கீகரிக்கப்பட்ட அய்ஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது ரயில் நிலைய முன்பதிவு மய்யங்கள் மூலம் மட்டுமே டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்புப் படையினர் (RPF) நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய நிலையங்களில் கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்களும் திறக்கப்பட உள்ளன.
ரயில் எண் மற்றும் நேரம் குறித்து இணையதளம் மற்றும் ரயில்வே சேவை எண்களுக்கு 139 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
