சென்னை, ஜன. 3- தமிழ்நாட்டில் நடப்பு குறுவை சாகுபடி சீசனில், இதுவரை 15 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு சுமார் 3,744 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல்
தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், ஒன்றிய அரசின் இந்திய உணவு கழகத்தின் சார்பில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.
அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பெற்றுக்கொள்ள 1,946 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டன.
முந்தைய ஆண்டை விட மும்மடங்கு அதிகரிப்பு: கடந்த 2024-2025 சீசனில் டிசம்பர் மாதம் வரை 5.34 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு அதே காலக்கட்டத்தில் 15 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 9.66 லட்சம் டன் அதிகமாகும்.தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல், அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக மாற்றப்படும். பின்னர், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். வரும் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து சம்பா சாகுபடி அறுவடை தொடங்க உள்ளதால், வரும் மாதங்களில் நெல் கொள்முதல் அளவு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
