பெண் கல்விக்கு வித்திட்ட சாவித்திரி பாய் பூலே பிறந்த நாளை தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சாவித்திரிபாய் பூலேவின் 196-ஆம் பிறந்தநாள் இன்று! (ஜனவரி 3, 1831 – 2026).

கற்பனைக்கெட்டாத பெண்ணடிமைத் தனம் நிலைகொண்டிருந்த 19-ஆம் நூற்றாண்டில் தன் இணையர் ஜோதிபா பூலேவுடன் இணைந்து சமூக நீதிக் களத்தில் போராடியவர் சாவித்திரிபாய் பூலே. போராட்டம் என்பது சொல்லளவில் அல்ல; அன்றாடம் அவருடைய வாழ்வே போராட்டத்தைக் கடந்துதான் அமைந்தது.
யார் இந்த சாவித்திரி பாய்பூலே!
பெண் கல்வி என்பதைக் குறித்தே சிந்தித்துப் பார்க்காத காலத்தில், மக்களின் மூளையில் நிறைந்த கசடுகளின் வெளிப்பாடாக, தன் மீது அள்ளி வீசப்பட்ட சாணியையும், மலத்தையும், கற்களையும் குறித்துக் கவலை கொள்ளாமல், மாற்றுப் புடவையுடன் சென்று பெண்களுக்குக் பள்ளிக் கூடப் பாடமும், ஆணாதிக்க ஜாதி வெறியர்களுக்கு சமூகநீதிப் பாடமும் நடத்திய தனிச் சிறப்பு மிக்க ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே!
தன் கணவரிடம் தொடக்கக் கல்வியைக் கற்று, பின்னர் முறைப்படி தேர்வெழுதி, அதன் பின்னர் ஆசிரியர் பயிற்சியும் பெற்று, அதனை மகளிர் கல்விக்காகவே அர்ப்பணித்த மகத்தான வீராங்கனை சாவித்திரிபாய் பூலே ஆவார்! ஜோதிராவ் பூலேவும், சாவித்திரி பாய் பூலேவும் மூன்று பள்ளிகளைப் பெண் குழந்தைகளுக்காக நடத்தினர். அவற்றில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அந் நாளிலேயே கல்வி கற்றனர். சத்தியசோதக் அமைப்பை நிறுவி, சமூகப் புரட்சி செய்தவர்கள் இருவரும்!
உண்மையான ஆசிரியர் நாள்!
உண்மையில், ஆசிரியர் நாளாகக் கொண்டாடு வதற்கு முழுமையான தகுதி உடைய நாள் சாவித்திரி பாய் பூலே அவர்களின் பிறந்தநாளே ஆகும். அப்படி வேறொரு நாள் கொண்டாடப்படும் வழக்கம் ஏற்பட்டு விட்ட காரணத்தால், மகளிர் கல்விக்காகத் தன்னை ஒப்படைத்த பெருமைக்குரிய பெருமகளின் பிறந்தநாளான இந் நாளை “மகளிர் ஆசிரியர் நாள்” என்றோ, அல்லது “பெண் கல்வி நாள்” என்றோ சிறப்புடன் கொண்டாடலாம்!
இந்தியா முழுமையும் போற்றப்பட வேண்டிய சமூகநீதி நாயகர்கள் – முன்னோடிகள் ஜோதிபா பூலே, சாவித்திரிபாய் பூலே, நாராயண குரு, சாகு மகராஜ், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோராவர்.
இந்தியாவுக்கே வழிகாட்டும் நாள்!
சமூகநீதிக் களத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு, சமூக நீதி நாளாகத் தந்தை பெரியார் பிறந்தநாளையும், சமத்துவ நாளாக பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாளையும் கொண்டாடுதல் போல, இந் நாளையும் கொண்டாடி, இதிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
3.1.2026
