என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார்! நமது நம்பிக்கையையும், மக்களின் நம்பிக்கையையும் மெய்யாக்கி சாதித்துக் காட்டியுள்ள முதலமைச்சருக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டு!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கும் ‘திராவிட மாடல்’ அரசு என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார் நமது முதலமைச்சர்!
நமது நம்பிக்கையையும், மக்களின் நம்பிக்கையையும் மெய்யாக்கிச் சாதித்துக் காட்டியுள்ள முதலமைச்சருக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கும் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று வாய்ஜாலங்கள் அல்ல; அவை உறுதியான வாக்கு(வாய்மொழி)கள் என்பதை மீண்டும் ஒருமுறை சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு நிரூபித்துள்ளது.
23 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்ட தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நெடுநாள் போராட்டத்தின் உண்மையைப் புரிந்து, தான் சொன்னபடியே சாதித்துக் காட்டியுள்ளார் நமது முதலமைச்சர்.
ஒன்றிய அரசு தந்து வருகின்ற கடுமையான நிதி நெருக்கடிகளுக்கும், நிதிச் சுமைகளுக்கும் மத்தியிலும், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிவித்து, ஆட்சி வாகனத்தின் சக்கரங்களாக இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கும் அரசு இது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்
உரிய குழுக்களை அமைத்து, ஆலோசனைகளைப் பெற்று, நடைமுறைக்குச் சாத்தியமான வகையில் அனைத்துச் சூழல்களையும் கணக்கில் கொண்டு, சரியான முடிவெடுத்து, நமது நம்பிக்கையையும், மக்களின் நம்பிக்கையையும் மெய்யாக்கிச் சாதித்துக் காட்டியுள்ள முதலமைச்சருக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
மும்பை
3.1.2026
