நடைப்பயண தொடக்க விழாவில் வைகோ பேச்சு
திருச்சி, ஜன.3 சமத்துவ நடைப் பயண தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசிய தாவது:-
பொங்கிவரும் பொன்னி ஆற்றங் கரையில், மலைக்கோட்டை நகரமாம் திருச்சி உறையூரில் 1938-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நடைப்பயணத்தை தந்தை பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தரம் பாரதியார், மணவை திருமலைச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்பித் தனர். அதே போன்ற எனது இந்த நடைப்பயணத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
1982-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி நான்மாடக்கூடல் சங்கம் வளர்த்த மதுரை மாநகரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, திருச்செந்தூரில் வைரவேல் காணாமல் போனதாக பிரச்சினை எழுந்த போது, தூக்கிலே தொங்குகிறார் சுப்ரமணிய பிள்ளை என்றபோது அது தற்கொலை அல்ல படுகொலை என்று நீதி கேட்டு கலைஞர் அன்று மதுரையில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டார்.
தென் திருப்பேரையில் ஆபர ணங்கள் திருடுபோய்விட்டதாக மக்கள் கவலைப்பட்டபோது, கலைஞர் நேரில் வந்து தென்திருப்பேரை கோவிலுக்குள் வந்து மக்களை சந்தித்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து என்னை அழைத்து நடைபயணமாக வந்து மனு கொடுக்க சொன்னார். நானும் 1986-ம் ஆண்டில் அந்த பகுதி மக்களுடன் நடைப்பயணமாக வந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை முதல் நடைப்பயணம் மேற் கொண்டேன்.
அதனை தொடர்ந்து 1994-இல் குமரியில் இருந்து சென்னை வரை ஆயிரத்து 600 கிலோ மீட்டர் அன்றைய ஊழல் ஆட்சியான அ.தி.மு.க.வை எதிர்த்து நடைப்பயணம், வரிசையாக நதிகள் இணைப்புக்காக 2002-ஆம் ஆண்டு மாவட்டங்கள் தோறும் சென்று நடைப்பயணம், நல்லிணக்கம் தழைக்க நடைப்பயணம், முல்லை பெரியாரை காக்க 3 முறை நடைப்பயணம், 2018-ம் ஆண்டு மதுரையில் இருந்து இடுக்கி, பென்னிகுயிக் அணை களை காக்க நடைப்பயணம் என பல்வேறு நடைப்பயணங்கள் மேற் கொண்டுள்ளேன்.
அதில் பலவற்றில் எனக்கு இன்றைய முதலமைச்சர் உறுதுணையாக இருந்துள்ளார். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்’ என்பதற்கு ஏற்ப, இந்த தமிழ்நாட்டில் மத பூசல்களுக்கு இடமில்லை என்பதை நிலை நாட்ட, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைப்பயணத்தை தொடங்கி யுள்ளோம்.
இந்த பயணத்தில் மக்களை சந்திக் கும் போதெல்லாம் இந்த பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று கோரிக்கை வைப்பேன். வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் சாதனை திட்டங்களை எடுத்துச் சொல்லுவேன். வெல்க திராவிடம், வெல்க திராவிடம்!
இவ்வாறு அவர் பேசினார்.
