கேள்வி 1: 93 வயதிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரே நாளில் 736 கி.மீ. தூரம் பயணித்துத் தாங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இயன்றமைக்கு அடிப்படை தந்தை பெரியாரிடம் பெற்ற பயிற்சியா? அல்லது தங்களுக்கு சமுதாயத்தின் மீதுள்ள அளப்பரிய அக்கறையா?
– சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில் 1: “தந்தை பெரியார் தந்த புத்திதான்” எனக்கு எப்போதும் என்று கூறுவதே தெளிவுபடுத்தும் விடை. “பெரியார் தந்த புத்தி” என்பது சமுதாயத்தின் மீதுள்ள அக்கறைக்குத்தான் முன்னுரிமை தரும் – இல்லையா?
- • •
கேள்வி 2: அனைத்து முற்போக்குச் சக்திகளும் கண்டிக்க வேண்டிய அளவில் சாகித்ய அகாடமி விருதாளர் தேர்வில் ஒன்றிய அரசின் தலையீடு வரம்பு மீறிப் போவது ஏன்?
– கி. நாகராஜ், நாகர்கோவில்.
பதில் 2: ‘விடுதலை’ நாளேடு (30.12.2025) – எனது அறிக்கையை அருள்கூர்ந்துப் படிக்க வேண்டுகிறேன்.
- • •
கேள்வி 3: எலெக்ட்ரிக் டிராம்கள் லண்டனில் கூட அறிமுகமாகாத நிலையில், 1895ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி அன்றே சென்னை நகர வீதிகளில் ஓடின என்றால், எப்படி? காரணம் என்ன?
– ஜெ. பாண்டுரங்கன், கிண்டி.
பதில் 3: விஞ்ஞான விந்தையும், பிரிட்டிஷ் ஆட்சி வெளிநாடுகளில் செய்த சாதனைகளும் – நம் சமூகம் அடைந்த நன்மைகளும் ஏராளம் உள்ளன என்பதற்கான எடுத்துக்காட்டல்லவா இது!

- • •
கேள்வி 4: புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்துக்காக ரூ.40 கோடி தருவதாகக் கூறியும் அதனை நிராகரித்த நடிகர் சுனில் ஷெட்டி அவர்களைப் பற்றித் தாங்கள் கூறுவது என்ன?
– பா. ஆனந்த், திருவொற்றியூர்.
பதில் 4: மிக மிகப் பாராட்ட வேண்டிய செயல்முறை. அவருக்கு ஆயிரம் வாழ்த்துகள்! இன்றைய சமூகத்தில் இது ஓர் அதிசயம். ஏனென்றால், “நாய் விற்ற காசு குரைக்காது – கருவாடு விற்ற காசு நாறாது” என்று கருத்துடன் மக்கள் உள்ள உலகில் இப்படி அத்திப்பூத்தாற்போன்ற செய்தி அரிதான ஒன்றே!
- • •
கேள்வி 5: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பான தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அனுப்பி இருப்பது ஏற்புடையதா?
– இ. பன்னீர்செல்வம், வேளச்சேரி.
பதில் 5: அவர் நமது பழங்குடி சமூகப் பெண்மணி என்பது பெருமிதமே! இப்படிப்பட்ட அரசியல் வஞ்சனை செயல் (அது உள்துறையைச் சார்ந்த முடிவு) அவமானகர, நியாயமற்ற செயலாகாதா? பரிதாபமே நமக்கு மிஞ்சுகிறது!
- • •

கேள்வி 6: “எத்தனை இடங்களில் போட்டி யிடுகிறோம் என்பது பிரச்சினை இல்லை. விழிப்புடன் செயல்பட்டு வலதுசாரிகளை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நமது கொள்கை” என்று மதுரை நிகழ்ச்சி ஒன்றில் தொல்.திருமாவளவன் உறுதியாகத் தெரிவித்த பின்பும் சிலர் அவரின் கூட்டணி நிலைப்பாட்டைத் திசைதிருப்பும் வண்ணம் பேசுவது ஏன்?
– இ. தனசேகரன், அரூர்.
பதில் 6: திட்டமிட்ட விஷமத்தனம். Disinformation – விஷமத்தனமான தகவல் பரப்பும் பாசாங்குக்காரர்கள் ஆசை எழுச்சித்தமிழரின் உறுதியால் ஒருபோதும் நிறைவேறாது என்பது திண்ணம்!
- • •
கேள்வி 7: “குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்கும் மேலான பொறுப்பில் இருந்து தாய் விலகும்போது சமுதாயம் பாதிக்கப்படுகிறது” என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனையுடன் சுட்டிக்காட்டி இருப்பதை தாங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
– க.தமிழ்ச்செல்வி, செய்யாறு.
பதில் 7: உண்மை என்றாலும் கூட, அது முழு உண்மையாகாது! ஏனென்றால், தந்தை, சமூகம் உள்பட்டோருக்கு கடமை இல்லையா? நீதிபதியின் கருத்துக்கு நன்றி. வரவேற்கத்தக்கதுதான்.
- • •

கேள்வி 8: விவசாயி ஏழையானால் இந்த நாடே ஏழை ஆகிவிடும் என்பதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1,000 உழவர் நல சேவை மய்யங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்திருப்பது ‘நான் ஒரு விவசாயி’ என்று கூறிக்கொள்பவரின் உள்ளத்தில் உதிக்காதது ஏன்?
– கி.கோவிந்தராஜ், திருவண்ணாமலை.
பதில் 8: அவருக்கு உதிக்காத விஷயங்கள் பல – அதில் இதுவும் ஒன்று! தனது அப்போதைய நாற்காலி ஆடாமலிருக்கக் கண்காணிப்பதற்கே தனக்கு நேரம் சரியாகப் போனது என்பதுதான் ஒருவேளை அவர் தரப்பு வாதமாக இருக்கலாம்!
- • •
கேள்வி 9: கிறிஸ்துமஸ் நாளன்று (டிசம்பர்-25) ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஜேபி. கட்சியினரால் நாடெங்கும் உள்ள கிறிஸ்துவக் கோயில்களில் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டதைக் கண்டிக்காமல், பிரதமர் மோடி டில்லி கிறிஸ்துவக் கோயிலில் பிரார்த்தனை செய்து இளம் பாதிரியார்களுடன் கலந்துரையாடினார் என்பது மக்களை திசை திருப்புவது தானே…?
– பா.ஆகாஷ், புதுடில்லி.
பதில் 9: ‘விடுதலை’யில் கண்டன அறிக்கை (26.12.2025)- இதுபற்றி விளக்கமாக வெளியாகியுள்ளது – “இரட்டை வேடப்போக்கு ஆர்.எஸ்.எஸ்.க்கே உரித்தான “கலை” அல்லவா?
- • •
கேள்வி 10: “சூப்பர் ஹீரோக்களை விட அனுமன், அர்ஜுனன், கர்ணன் போன்றோர் சக்தி வாய்ந்தவர்கள் என்று பிள்ளைகளுக்குச் செல்லிக்கொடுக்க வேண்டும்” என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசி இருப்பதற்குச் சட்டம் அவர்மீது பாயாதா?
– அ.அப்துல் அகத், அய்தராபாத்.
பதில் 10: “ஆந்திராவை நவீன அறிவியல் மய மாநிலமாக்க வேண்டும்” என்று கூறும் இவர், இப்படி தனது மனதில் இந்தப் புராணக் கற்பனைக் குப்பைக் கூளங்களை ஏற்றிச் சுமப்பது அழகாகுமா? அந்தோ பரிதாபம்!
