மானாய் மயிலாய்
மடப்பிடியாய்
மாங்குயிலாயத்
தேனாய் நறவாய்ச்
சிலையாய்த் திறள்கனியாய்
ஊனாய் உடலாய்
உனைவேட்கும்
ஆண்வலையில்
தானாய்நீ வீழச்
சதிவளர்த்தார் பெண்ணேகேள்!
கூனாய் உனதுரிமை
குன்றிவிட ஆணுருமை
வானாய்க் கதிராய்
வளர்த்தார்உன் மேனிமிசை!
மீனாய் வலைப்படலை
விட்டினியுன் மெய்யுணர்வின்
பானாய்வாய்= வையாமற்
பார்த்தேலோ ரெம்பாவாய்!
பெண்வெளியே வந்தால்
பெயல்வாராய் ரெம்பாவாய்
கண்வெளியே முத்திக்
கழன்றோட வாய்வழிவார்
நுண்வெளிகள் ஆடிவழி
நோக்களிக்கும் பெட்டிமுன்னே
பண்வெளியில் பெண்ணிடையின்
பாவாடை பட்டிகைகள்
கிண்ணென்று போர்த்தும்
கிளர்செழுமை பாட்டாக்கி
வண்ணத் திரையில்
வழியும் வருணனைகள்!
எண்ணம் இருட்டாம்;
இரைநீ! இறைஆணாம்!
மொண்ணைப் பண்பாட்டை
முறிக்கேலோ ரெம்பாவாய்!
ஆணினதி காரம்
அடல்நீண்டும் உன்காயம்!
நாணிக்கோ ணும்உன்
நலமவர்க்கு வெங்காயம்!
சாணித் தெளித்துத்
தரைபெருக்கிக் கோலமிட
ஆணி அடித்தே
அடுக்களையில் ஆண்சுவைக்கே
பாணி சமையல்
பலவகைகள் செய்தளித்தும்
ஊணின்மேல் ஆசை
ஒருவி இடைமெலியக்
காணிரவில் ஆடை
களைந்திடவோ வாழ்வுனதே!
மாணிழப்பை மாற்றி
மலர்ந்தேலோ ரெம்பாவாய்!
பண்ணியமாய் உன்னைப்
பதங்காணும் ஆடவரை
பெண்ணியத்தைக் கண்டால்
பிதற்றிக் குரைக்கின்றான்!
கண்ணியமும் பண்பாடும்
காணலையாம், பெண்ணுக்குப்
புண்ணியமே சேர்க்கும்
புருசனடி என்கின்றான்
“அண்ணி கொழுந்தற்(கு)
அதிதெய்வம்” கொண்டவனோ
வண்ண மனையாளின்
வாரழகுத் தங்கையினை
எண்ணி மணப்பானாம்,
ஏய்க்கும் “கலாசாரம்”
விண்ணில் உதைக்க
விரைந்தேலோ ரெம்பாவாய்!
– கவிஞர் கண்ணிமை
(பானாய் – பால்காய்)
