ஆரிய சூழ்ச்சியால் அழிந்த மாவீரன்

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

(மாவீரன் சிவாஜி அந்நாளிலே பார்ப்பன எதிர்ப்பாளன். நாடுகள், சொத்துகள் பல பெற்றான். பின் காகப்பட்டர், ராத்தாஸ் என்ற இரு வேதப் பார்ப்பனர்களின் கைப்பாவையானான். விளைவு பக்திப் பித்தம், உயர்ஜாதிப் பித்தம், இதனால் முடிசூட்டு விழாவில் அவனது பெரும் செல்வமும் பொருள்களும், பிராமணாந்தக் கடலில் கலந்தன. அவனது பிற்கால வாழ்வு வேதனைக் கடலாயிற்று. திரு.திலுப் பத்காவோங்கர் என்பார் இந்த வீரசிவாஜியின் இன்ப – துக்க வரலாற்றை ரத்தினச் சுருக்கமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். இக்கட்டுரை பம்பாய் ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’ 26.5.1974 இதழில் வெளியாகியுள்ளது. தமிழில் தருபவர் பி.வி.ஆர்.)

பார்ப்பனர் – சைவ பற்றாளர்கள். சத்ரபதி சிவாஜியை, ஒரு குறுநில மன்னனைப் போற்றினர். புராணங்கள் பாடினர். சிவபிரானின் அவதாரம் என்றும் பிற்காலத்தில் புனைந்து எழுதினர்.

ஆனால், உண்மை வரலாறோ? நாட்டு மக்கள் நலிவு தீர்த்து நல்வாழ்வும் செல்வச் செழிப்பும் அவர்களுக்கு அளித்திட்ட நல்லாட்சி நன்னெறி நல்வேந்தனாகத் திகழ்ந்தானா இந்த சத்ரபதியான மகாவீர சிவாஜி?

பார்ப்பனப் புளுகு

இவன் மாவீரன் என்பது பொதுப்படைக் கருத்து. பார்ப்பன புராணிகர்களோ, அவனது தன்னியற்கை வீரத்திறனை குறைத்துக் கூறினர். அவனது வீரவெற்றி எல்லாம் அவனது குலதெய்வமான பவானியின் அருள் பிரசாதமாக அளித்த தெய்வீக வாளினால் கிடைத்தது என்றனர். இதன் உண்மை அந்த வாளையும், மற்றொன்றையும் வீரத் தளபதி சிவாஜி போர்ச்சுகீசியரிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கினான் என்பது வரலாற்றுச் சான்று. இந்த வாள்கள் ஸ்பெயின் நாட்டு டெலிடோ என்ற ஊர் உலைக்களத்தில் செய்யப்பட்டவை. இவன் மன்னனானதும் பார்ப்பன குரு பக்தி மேலிட்டது. அவர்கள் கைப்பாவையானான். நாட்டு மக்கள் நல்வாழ்வில் கருத்துச் செலுத்தவியலாதபடி, பூசையும் பஜனையும் குரு உபதேசங்களும் ஆக்கிரமித்துக் கொண்டன. நாட்டு மக்களுக்கு எள்ளளவும் நல்லதும் நல்வாழ்வும் கிட்டாது செய்து விட்டனர்.

பண விரயம்

மக்கள்  நலிவிற்குக் காரணம் போர்களில்  திரட்டிய பெரும் செல்வத்தையும் நாட்டு மக்கள் கொடுத்த வரிப்பணத்தையும் மன்னனானதும் சிவாஜி பிராமணார்த்த மதச் சடங்கு செலவுகளுக்கு, பக்தி மதியிருட்டால் வாரி இறைத்து விட்டான். நாட்டு மக்கள் நலனுக்கான பணிகளுக்கு பணம் காசு பண்டம் பொருள் எதையும் மிச்சமாக விட்டுவைக்கவில்லை. புரோகிதக் கும்பல் சிவாஜியின் பொறுப்பில் களஞ்சியத்தில் இருந்த பெருமளவு பணத்தையும் பொருள்களையும் சுரண்ட பார்ப்பன புரோகிதர்களுக்கு நல்வாய்ப்பளித்தது இவனது முடிசூட்டு விழாவாகும்.

சுரண்டல் அம்பலம்

வேத சாஸ்திரங்கள் பார்ப்பனர் சுரண்டல்களுக்கு ஆதார ஏடுகளாயின. ஜாது நாத் சர்க்காங் என்ற வங்க வரலாற்று அறிஞர் இந்தச் சுரண்டல் கதையை அம்பலமாக்கியுள்ளார். வரலாற்றுச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளார். இது போன்ற உண்மைகளை எடுத்துக்காட்டிய வரலாற்று ஆசிரியர்  டாக்டர் பண்டரிநாத் ரண்டே பதவியிலிருந்து நீக்கப்பட்டார், மராட்டிய பல்கலைக்கழகத்தால். பார்ப்பனப் புரோகிதர் பணம் சுரண்டலுக்கு கையாயுதமாயின் வருணாசிரம தர்மமும் மனுதர்ம சாத்திரமும் சத்திரியர் மாத்திரமே நாடாள வேண்டும் – நாடாளும் வேந்தராக முடிசூட்டிக் கொள்ள தகுதியுடையவர் என்ற சுலோக வாய்ப்பாட்டை சிவாஜியிடம் பாடம் ஒப்புதவித்தனர். ஆரியர் வேத சாஸ்திரப்படி சிவாஜி சத்திரிய வருணமல்ல.

பார்ப்பன சதி

மலைவாசி – வேளாண்மை பரம்பரை – பார்ப்பன சாத்திரப்படி சூத்திரன். இவன் சத்ரியனாக வேண்டு மானால் இரு பிறப்பாளனாக்கப்பட வேண்டும். அதாவது வேதசாஸ்திர சடங்குகள் பூணூல் புரோகிதர்களைக் கொண்டு நடத்தி அவர்கள் கையால் பூணூல் அணிவித்துக் கொள்ள வேண்டும் என்றனர். பூசுரர்கள் இந்தச் சடங்கையும் உள்ளூர் பார்ப்பனர் செய்ய ஒப்பவில்லை. தாழ்ந்த குலம் – தங்களுக்கு தோஷம், பாபம் என்று ஒதுக்கினர்.

தேடித்தேடிக் கடைசியில் விசுவேசுவரர் என்ற காசி வேதவேதியப் புலவனைப் பிடித்தனர். காகப்பட்டர் என்பதும் இவனுக்கு இடு குறிப் பெயர்.

இந்த சமஸ்கிருத பண்டித சிரோமணி ஏடுகளைப் புரட்டி ஆராய்ந்து, சிவாஜியின் குலத்தினரான பான்சவேகன் உதயபுரி மகாராஜா கோசன் பரம்பரையில் கிளைப் பிரிவினர். சந்ததியர் என்று கணித்துக் கூறினார்கள். இந்தக் குல வரலாறு கண்டுபிடிப்புக்காக காகபட்டருக்கு பெருந்தொகை தட்சணை தரப்பட்டதுடன், முடிசூட்டு விழா தலைமைப் புரோகிதனுமாக்கப்பட்டான்.

11,000 பார்ப்பனக் குடும்பங்கள்

நாடெங்குமுள்ள வேத பாடப் பார்ப்பனருக்கு இந்த முடிசூட்டு விழா அளவு படிக்கள் அனுப்பப்பட்டனர். 11,000 வேத பாட பார்ப்பனர்கள், தங்கள் பெண்டுபிள்ளை குடும்பங்களுடன், சிவாஜியின் தலைநகரான ராஜ்கர் கோட்டைக்கு வந்து முகாம் போட்டனர். நான்கு மாதகாலம் இந்த மாபெரும் கும்பலுக்கு உபசாரம் விருந்து புதுப்பட்டுப் பட்டாடைகள் எல்லாம் சிவாஜியின் கஜானா பணத்தைக் கொண்டுதான் இந்த பிராமணார்த்தக் கைங்கரியம் நடத்தப்பட்டது.

பூணூல் மாட்ட 25,000 தங்கக் காசுகள் செலவு

சிவாஜிக்கு பூணூல் கயிறு மாட்டி சத்திரியனாக்கும் சடங்கு நடத்தி வைப்பதற்கு மாத்திரம் கைக்கூலி தட்சணையாக காகப்பட்டனுக்க மாத்திரம் 7,000 தங்கக் காசுகள் சமர்ப்பிக்கப்பட்டன. மற்ற பிராமணார்த்த சுகபோகி புரோகித கும்பலுக்கும் 17,000 காசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

பணம் மடை திறந்த வெள்ளம்

இதன் பினனரும், சிவாஜிக்கு பாபவிமோசன சடங்கின் பெயரால் தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை, துத்தநாகம், தகரம், ஈயம், இரும்பு, உலோகங்களும் பட்டாடைகள், கற்பூரம், உப்பு, வாதுமைப் பருப்பு மற்றும் நறுமணப் பொருள்கள், வெண்ணெய், நெய், சர்க்கரை பல்வேறு வகைப் பழங்கள் மற்றும் பணியாரங்கள் அவரது எடைக்கு எடையாக நிறுத்து, பார்ப்பனருக்கு கொடையாக அளித்தனர். இவற்றின் அக்கால மதிப்பே ஒரு லட்சம் பொற்காசுகள்.

இந்தப் பணம் பிடுங்கி வேலை மேலும் தொடர் கதையாயிற்று. வேற தந்திரமுறையை சிருஷ்டித்தனர்.

சிவாஜி கொங்கனம் முதலிய பகுதிகளில் நடத்திய போரில் பார்ப்பனர்கள், பசுக்கள், பெண்கள், குழந்தைகள் பலர் கொல்லப்பட்டதால் சிவாஜியை பிராமண ஹத்தி, கோஹத்தி சிறீ ஹத்தி சிசு ஹத்தி தோஷங்கள் பிடித்துள்ளன. இந்த பாபவிமோசனத்துக்காக பணம் தரவேண்டும் என்றனர். கொல்லப்பட்டவர் குடும்பங்களுக்கல்ல – முடிசூட்டு விழாவுக்கு வந்திருந்த புரோகிதக் கும்பலுக்கு இந்தப் பணம் தரவேண்டும் என்று கூறி பெற்றுக் கொண்டனர்.

முடிசூட்டு விழாவின்போது சிவாஜி திருமுழுக்குக்காக கங்கைத் தண்ணீர் கொண்டு வந்ததற்கு காகபட்டருக்கு தட்சணை 5,000 பொற்காசுகள் – மற்ற பார்ப்பன வேதியருக்கு தலைக்கு 100 பொற்காசுகள் தரப்பட்டன.

விரயப்படலம் இத்துடன் நிற்கவில்லை. முடிசூட்டிக் கொண்ட பின்னர் சிவாஜி சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதாக 16 வகை தானங்கள் பார்ப்பனருக்கு செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டான்.

போட்டிக் கும்பல் சுரண்டல்

இந்த விழா சடங்கு நடத்திய காகப்பட்டர் கும்பல் வேதப் பார்ப்பனர் – இவர்களுக்கு மாத்திரமே செல்வ போகம் – மற்ற பிரிவு பார்ப்பனரை விரட்டியடித்தனர்.

நிஸ்சால்பூரி கோஸ்வாமி என்ற புரோகிதர் தலைமை யிலிருந்த வங்க நாட்டுத் தந்திரீக சம்பிரதாயத்தினர் பணம் பிடுங்கி தந்திரோபயம் செய்தனர்.

காகப்பட்டர் கணித்த முடிசூட்டு நாளும் நட்சத்திரமும் தோஷம் என்றனர் – முடிசூட்டிய சில நாட்களில் சிவாஜியின் மனைவி காசிபாயும், தாய் ஜிஜிபாயும், தளபதி பிரதாப்ராஜும் திடீரென விபத்துக்குள்ளாகி செத்தது இந்த தோஷத்துக்குக் காரணம் என்றனர். மறு முடிசூட்டு விழா நல்ல நாளில் நடத்த வேண்டும் என்றனர். துச்சத்தால் முதுமை மதித் தடுமாற்றத்தால் மூடநம்பிக்கையால் மதமன மருட்சியால் சிவாஜி இதற்கு இரையாகினான். இந்த இரண்டாம் முடிசூட்டு விழா முன்னதைவிட அதிக ஆடம்பரமாக நடத்தப்பட்டது.

இந்த இரண்டு முடிசூட்டு விழாக்களின் விளைவு – சிவாஜி மகராஜாவின் கஜானா அடியோடு காலியாக்கப்பட்டு விட்டது – பார்ப்பனப் புரோகிதர்களால். இதன் விளைவு – நாட்டு மக்கள் வறுமையில் தவித்தனர் – இவர்கள் வேதனையையும் தொடர் கதையாக்கினர். வரி வாங்கும் அதிகாரிகள், பார்ப்பனத் தலைவர்கள் சித்திரவதை செய்தும் குடியானவர்கள் – வணிகர்களிடம் பணம் பிடுங்கினர்.

சிவாஜியின் சாம்ராஜ்யம் வீழ்ச்சிக்குப் பார்ப்பனர்களே பொறுப்பாளிகள் என்று ரண்டே என்ற ஆசிரியர் தீர்ப்புக் கண்டிருக்கிறார்.

மலைவாசி, வேளாண்மை, பாட்டாளிகளான மாவலிகள் படைவீரராகி சிவாஜிக்கு நாடுகளும் சொத்துகளும் திரட்டிக் கொடுத்தனர். வேதசாஸ்திர புரோகிதப் பார்ப்பனர்கள் அந்தப் பெரும் செல்வத்தை சுரண்டிக் கொண்டு, மன்னனை, மதமருளாளனாகவும வறியவனாகவும் வேதனைக் கோலமாக ஆக்கினர்.

– ‘விடுதலை’ – 08.06.1974

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *