திருவாங்கூர் சமஸ்தானம் (16) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’-மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கடவுளின் ஆணை என்றும், ஜாதிய சட்டங்கள் என்றும் அனைத்து மக்களையும் நம்ப வைத்து நம்பூதிரிப் பார்ப்பனர்கள் செய்த கொடுமைகள் உலகில் எந்த நாட்டிலும், எந்த மக்களிடமும் நிகழாத கொடுமைகளாகும். நாட்டின் அரசர்களும் பார்ப்பனர்களின் கீழடுக்கு ஜாதியான சத்திரியர்கள் என்பதால் அவர்களும் இந்த மூளைச் சலவைக்கு ஆளானவர்களே. சுருங்கச் சொன்னால் மூன்று சதவிகிதமே மக்கள் தொகையில் இருந்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள் 97 சதவிகித மக்களை, அரசன் உள்பட ஆட்டி வைத்தனர். நாட்டின் அனைத்து வளங்களுக்கும் அவர்களே உரிமையாளர்களாக ஆகிப் போயினர். அவர்களின் இந்த மேலாண்மையால் நாட்டில் கோயில் சொத்துகள், பொருளாதாரச் சுரண்டல்கள், பாலியல் சுரண்டல்கள் வரை முறையின்றி இருந்தன.

கட்டுரை, ஞாயிறு மலர்

கீழ்ஜாதிப் பெண்கள், சூத்திர நாயர் பெண்கள், அந்தர் ஜனம் என்கின்ற பார்ப்பனப் பெண்கள் என்று நாட்டில் உள்ள எல்லாப் பெண்களும் இவர்கள் பாலியல் சுரண்டல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளானவர்களே! கீழ்ஜாதிப் பெண்கள், சூத்திர நாயர் பெண்களும் ஒருபுறம் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளானார்கள் என்றால் அந்தர்ஜனங்களோ பாலியல் உணர்வுகளை அடக்கி, அடக்கி உணர்வுகளை வெளிக்காட்டாமலேயே வாழ்நாள் முழுவதும் கழித்து, மரணத்தை சந்தித்து வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் சோகத்திற்கு ஆளானார்கள். இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் பெண்கள் சதையும், இரத்தமும், உணர்ச்சிகளும் இல்லாத மனிதர்களாக நினைக்காமல் அவர்களை ஒரு போகப் பொருள்களாக நினைத்ததுதான். இதற்குப் பார்ப்பனர்களின் புராணங்களும், வேதங்களும், மனுஸ்மிருதிகளும், கீதையும்தான் காரணம். தங்கள் வசதிக்கேற்ப அவற்றை உருவாக்கி, அவை கடவுளால் கூட மாற்ற முடியாது என்று கூறி, அந்தக் கடவுளின் கட்டளைகளுக்கு மக்கள் அடிபணிய வேண்டும் என்று அனைத்து மக்களையும் ‘மூளைச் சலவை’க்கு ஆளாக்கியதன் விளைவுதான்!

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை பெண்கள், சூத்திரர்களவிட கேவலமானவர்களே. “ஸ்தீரினாந்த சூத்ர ஜாதினாம்” என்றும், “நஸ்தீரி சூத்ர வேதமத்யதாம்” என்கிறது அசல் மனுதர்மம். சூத்திரர்களும், பெண்களும் வேதங்களை ஓதக்கூடாது. கேட்கக் கூடாது. தரவாடுகளில் எழுப்பப்படும் வேத கோஷங்கள் காதில் விழாதபடிக்கு புடவையால் காதை மூடிக்கொள்ள வேண்டும். “ஸ்தீர தாம உபநயனஸ்தானே விவாஹம் மனு ரப்ரவீத்” என்று பார்ப்பன ஆண்களுக்கு ஈடான பூணூல் சடங்குகள் கிடையாது. பூணூல் போடுவதன் மூலம் ‘துவிஜாதி’ பிறப்பாளர்களாக – பார்ப்பனர்களாக மாற்றும் சடங்கே இந்த உபநயனம்.

இதுபோன்ற பல விதிகளும், ஜாதிய சட்டங்களாக மாற்றப்பட்டு திருவாங்கூர் சமஸ்தானப் பெண்கள் மீது திணிக்கப்பட்டன. முதல் நம்பூதிரி ஆணைத் தவிர மற்ற ஆண் பிள்ளைகள், அந்தர் ஜனங்களைத் திருமணம் செய்து கொள்ள முடியாத சமூகக் கட்டுப்பாடு இருந்ததால், அதை வைத்துக் கொண்டு, அந்தச் சட்டங்களையே பாதுகாப்பாகக் கொண்டு நம்பூதிரிப் பார்ப்பனர்கள், சூத்திர நாயர் பெண்களை பாலியல் சுரண்டல்களை தங்கு தடையின்றிச் செய்தனர். நாயர்கள் திருமணத்தின்போது, திருமணம் ஆகாத நம்பூதிரிகளுக்கே (ஏற்கெனவே செய்த ஏற்பாட்டின்படி) முதலில் மணம் முடித்து வைப்பர். இந்த ஏற்பாட்டின்படி நாயர் பெண்களுக்குப் பிறந்த குழந்தைக்குத் தகப்பன் யாரென்றே தெரியாத நிலை நிலவியது. அந்தக் குடும்பப் பிள்ளைகளை, ‘பத்ததப்பண்ட மக்கா’ என்று சொல்வது ஒரு நிகழ்வு. அதைக் கேவலம் என்று கூட நினைக்காமல், பெருமையாக நினைக்கும் வகையில் அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தக் குடும்ப அமைப்பால் ஆண்களுக்கு எந்த பொறுப்பும் வந்துவிடக் கூடாது என்ற குறிக்கோளோடு செய்யப்பட்ட ஏற்பாடு. (Ref: “தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” அந்தர்ஜனம் – பரிதாபத்திற்குரிய நம்பூதிப் பெண்கள் 8.7.2017).

ஒருபுறம் நாயர் பெண்கள் சூறையாடல் என்றால், மறுபுறம் அந்தர் ஜனங்களுக்கோ திருமணமோ, வாழ்க்கையோ பகல் கனவான நிலை. வெளி உலக தொடர்பே இல்லாமல் தரவாடுகளில் இருண்ட அறைக்குள்ளேயே பிறந்து, இருந்து, இறந்து போகும் வாழ்க்கை அவர்களுடையது. உணர்ச்சிகளை சமூகச் சட்டங்கள் எத்தனை காலம் அடக்க முடியும். அவர்களுக்குப் பாதுகாக்கும் காவல்கார நம்பூதிரிப் பெண்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு, அவர்கள் மூலம் நாயர்களோடு ரகசியமாக உறவு கொல்லும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  அந்தர் ஜனங்களின் இந்த ரகசிய உறவு வெளியே தெரியாவண்ணம் வேலைக்காரப் பெண்களால் (தாசிகள்) மறைக்கப்பட்டது. அந்தர் ஜனங்கள் சிறிய வாலிபப் வயதிலேயே கிழட்டு நம்பூதிரிகளுக்கு வாழ்க்கைப்பட்டு வதங்கிய நிலை. அந்த கிழட்டு நம்பூதிரி இரண்டு, மூன்று அந்தர் ஜனங்களைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் நிலை. இப்படி பல முனைகளிலும் அந்தர் ஜனங்களைத் தவறான வாழ்க்கைக்குத் தள்ளியது என்பதே நிதர்சனமான உண்மை. இந்த ரகசிய வாழ்க்கை வீட்டில் உள்ள அச்சன் நம்பூரிக்கோ, வேறு யாருக்கோ தெரிந்தால் அது மிக மோசமான விளைவை அந்தர்ஜனம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தப்பித் தவறி ஏதாவது அந்தர் ஜனம் தவறான நடத்தை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் அவரின் தவறை நிரூபித்து, அவருக்குத் தண்டனை வழங்க ஒரு விசாரணை நடத்தப்படும். அதற்கு “ஸ்மார்த்த விசாரம்” என்ற பெயர். இந்த விசாரணை நடத்துபவர்கள் “ஸ்மார்த்தர்”கள் என்று அழைக்கப்படுவர். இந்த ஸ்மார்த்தர்கள் அனைவரும் நம்பூதிரிப் பார்ப்பனர்களே! குற்றச்சாட்டை திருவாங்கூர் அரசருக்கு, ஸ்மார்த்தர்கள் தெரிவித்து, “ஸ்மார்த்த விசாரத்”திற்கு அனுமதி பெறுவர்.

அதற்குப் பிறகு ‘விசாரணைக் கிமிணனை’ஒத்த ஸ்மார்த்த விசாரணைக்கு நாள் குறிப்பிடப்படும். ஸ்மார்த்த விசாரணை தொடங்கி விசாரணை நடக்கும் நாட்கள் அந்தர் ஜனம் மீது பல வகைகளில் கொடுமைக்கு ஆளாவார். குற்றவாளி ஆண்களுக்கு மேல் பெரும்பாலும் எந்தக் கொடுமையோ, தண்டனையோ இருக்காது. குற்றவாளி தம்மை நிரபராதி என்ற நிரூபிக்க ஸ்மார்த்த விசாரம் முடிந்த பின் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். சுசீந்திரம் (இப்பொழுது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. அப்பொழுது திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது.) தாணுமாலயன் கோயிலில் ஒரு செம்பில் கொதித்த எண்ணெய் வைக்கப்பட்டிருக்கும். அதில் குற்றஞ்சாட்டப்பட்டவர் கையை முக்கி எடுக்க வேண்டும். கையில் சுடுகின்ற எண்ணெய்யால் குற்றஞ்சாட்டப்பட்டவர் கைகள் கொப்பளிக்காமல் இயல்பாகவே இருந்தால் அவர் குற்றம் செய்யவில்லை என்று தீர்ப்பளிப்பர். அதுவே கைகளில் கொதிக்கின்ற எண்ணையால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்படுவார். ஸ்மார்த்தர்கள் குற்றவாளிக்குத் தண்டனை வழங்குவர். குற்றம் ஒரே வகைதான் (தவறான உறவு) என்றாலும் தண்டனை ஒரே மாதிரி கிடையாது. தவறிழைத்தவர் நம்பூதிப் பார்ப்பனர் என்றால் அவர் “ஜாதி விலக்கம்” செய்யப்படுவார். அதுவே சூத்திர நாயர் என்றால் ஜாதி விலக்கத்தோடு, நாடு கடத்தப்படுவார். நாயர்களுக்கும் கீழான ஜாதியினர் என்றால் மரண தண்டனை கூட கொடுக்கப்படும். “கைமுக்கு” என்றழைக்கப்படும், சுசீந்தரம் தாணுமாலயன் கோயில் நிகழ்வுதான் ஓர் ஆணுக்கு (உச்சநீதிமன்றம் போல்) முடிவான இறுதித் தீர்ப்பாக அமையும். ஆண், இந்தத் தண்டனைக்கு (மேல் ஜாதி) ஆளானால் மீண்டும் ஜாதி விலக்கம் நீங்கிய நிலைமையைக் கூட சில ஆண்டுகளில் ஸ்மார்த்தர்கள் அனுமதியோடு பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.

ஆனால், பரிதாபத்திற்குரிய அந்தர்ஜனமோ ஒரு குற்றம் சாட்டப்பட்டால் அவர் மேல் ஸ்மார்த்த விசாரம் விசாரணை ஆறு நிலைகளில் நடத்தப்படும்.

அதில் முதல் நிலை, “தாசி விசாரம்” என்றழைக்கப்படும். அந்தர்ஜனம் கூடவே இருக்கும் பெண்தான் ‘தாசி’ என்றழைக்கப்படுவார். ஸ்மார்த்தர்கள் அவரிடம் கடுமையான முறையில் விசாரணை நடத்துவார்கள். அந்த விசாரணையிலேயே அந்தர் ஜனம் மேல் இருக்கும் குற்றம் ஏறத்தாழ உறுதிபடுத்தப்பட்டு விடும். அந்தக் குற்றம் செய்த அந்தர்ஜனம் அப்பொழுதே ஏறத்தாழ தண்டனைக்கு உள்ளாவார். இரண்டாம் நிலையான இந்த நிலையில் அந்தர்ஜனம் தரவாட்டின் ஒரு கோடியில் இருக்கும் “அஞ்சாம்புரா” அக்கல் என்ற தனியறையில் அடைக்கப்படுவார். அங்கிருக்கும்போது அந்தர்ஜனத்திடம், ஸ்மார்த்தன் அவர் குற்றவாளியா என்று கேள்வி கேட்பார். அவர் கேள்வி நேரடியாக அந்தர்ஜனத்திடம் இருக்காது. மூடியுள்ள அஞ்சாம்புராவின் உள்ள அந்தர்ஜனத்திடம், ஸ்மார்த்தனின் கேள்வியை தாசி மூலம் கேட்டு, பதிலை ஸ்மார்த்தன் பெறுவார். அவர் குற்றத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவருக்கு பலவிதத்திலும் தண்டனை கிடைக்கும். ஒரு பாயில் அந்தர் ஜனத்தை சுற்றிக்கட்டி, படிக்கட்டுகளில் உருட்டி விடுவர். அதனால் இரவு முழுவதும் படுக்கக் கூட முடியாமல் நின்று கொண்டே இருக்க வேண்டும். பாம்புகள், விஷப்பூச்சிகளை அஞ்சாம்புராவில் விட்டு விடுவர்.

உயிர்வாழ சிறிது உணவு மட்டும் வழங்கப்படும். தவறே செய்யாத சில அந்தர் ஜனங்கள் கூட இந்தக் கொடுமைகளைத் தாங்காது தவறிழைத்ததாக ஒத்துக் கொள்ளும் நிகழ்வுகளும் நடந்ததுண்டு. இவ்வளவு நிகழ்வும் ஸ்மார்த்தன் வீட்டில்தான் நடக்கும். பார்ப்பன ஸ்மார்த்தன் கோர்ட் போன்ற அமைப்பில் நடத்தமாட்டான். மூன்றாம் நிலை விசாரம், ஸ்மார்த்தன் அரசனிடம் முறையிடுவான். அரசன் 4 விசாரணை அதிகாரிகளையும், ஒரு நம்பூதிரி பார்ப்பான், ஸ்மார்த்தன் ஆகியோரை நியமித்து விசாரணைக்கு அரசு ஆணை பிறப்பிப்பார்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட அந்தர்ஜனம், தன் அந்தர்ஜனம் என்ற தகுதியை இழக்கிறார். அதன் பின் அவர் “சாதனம்” (உயிர் அற்ற பொருள்) என்றழைக்கப்படுகிறார். அவளோடு உறவு கொண்ட ஆண்களின் (ஜாரன்களின்) பெயர்களை அங்க அடையாளங்களோடு சாதனம் சொல்ல வேண்டும்.

அதற்குப் பின் ஜாரன்களை (ஆண் குற்றவாளிகள்) அரசனிடம் அழைத்துச் செல்லப்படுவான். அங்கிருந்து சுசீந்தரம் கோயிலுக்குப் போய் ‘கைமுக்கு’ நடத்த வேண்டி அரசர் ஆணையிடுவார். அதை வைத்து ஆணுக்கு தண்டனை வழங்கப்படும். இதைத்தான் “சொரூபம் சொல்லல்” என்ற நான்காம் நிலை என்பர். குற்றம் செய்த ஆணின் அங்க அடையாளங்கள், மறைவான பகுதிகளைப் பற்றியெல்லாம் (சொரூபம்) அந்தர்ஜனம் சொல்ல வேண்டும்.

அய்ந்தாம் நிலை “தேக விசேதம்” என்றழைக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட “சாதனம்” தெருவிற்கு துரத்தப்படுவார். அவரை மிகவும் கீழ்ஜாதிக்காரர், “பொறுக்கிக் கொண்டு போக அனுமதிக்கப்படுவார்.

கடைசி ஆறாம் நிலை, “சுத்த போஜனம்” என்றழைக்கப்படும் விசாரணைக்கு வந்த அதிகாரிகளுக்கும், ஸ்மார்த்தனுக்கும், தன் “மனா” (இல்லம்) சாதனம் தொலைந்ததால், சுத்தமாகி விட்டதைக் குறிக்கும் வகையில் இல்லத்தின் அச்சன் நம்பூதிரி விருந்து கொடுப்பார். இதோடு ‘ஸ்மார்த்த விசாரம்” முடிவுக்கு வரும்.

பல நூற்றாண்டுகள் அந்தர் ஜனங்கள் மேல் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அது எப்பொழுது?

(Ref: “துருக்கள்”. கேரளாவில் “அந்தர்ஜனம்” என்ற பெயரில் பெண்களுக்கு எதிராகப் பல நூற்றாண்டுகளாக நடந்த கொடுமைகள் – “தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” – அந்தர்ஜனம் பரிதாபத்திற்குரிய நம்பூதிரிப் பெண்கள்).

( தொடருவேன்…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *