“இந்திய அரசியலில் “பதவியைத் தக்கவைக்க எத்தகைய மோசமான நபரையும் பக்கபலமாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று சாணக்கிய நீதி பற்றிக் கூறும்போது மேற்கோள் காட்டுவார்கள்.”
உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் ஒரு சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையும், அதில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் தற்போது பிணை பெற்றுள்ளதும் இந்தியாவின் நீதி மற்றும் அரசியல் நிலவரம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒன்றிய அரசு “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” (Beti Bachao, Beti Padhao) என முழக்கமிட்டாலும், நடைமுறையில் ஒரு மக்கள் பிரதிநிதியே அத்தகைய குற்றத்தில் ஈடுபடும்போது அரசு இயக்கம் அவரை எப்படிக் கையாள்கிறது என்பது முக்கியமானது.
ரத்தமும் கண்ணீரும் நிறைந்த வழக்கு
5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரை, தண்டனை குறைப்பிற்காக “சாதாரண மனிதர்” என்று சட்ட ரீதியாக வாதிடுவதும், அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை வெறும் 7 ஆண்டு சிறையாகக் குறைக்க முயல்வதும் முரண்பாடுகளின் உச்சம்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் கொல்லப்பட்டது, அந்தப் பெண்ணின் அத்தை, பெரியம்மா, வழக்குரைஞரை கார் மோதி கொலை செய்ததும் பாதிக்கப்பட்ட பெண்ணை நிரந்தர மாற்றுத் திறனாளி ஆக்கியது என இந்த வழக்கின் பின்னணி ரத்தமும் கண்ணீரும் நிறைந்தவை.
அரசியல் பலம் பொருந்தியவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தற்காலிகமாகத் தப்பினாலும், அது பொதுமக்களுக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் செயலாகவே அமையும்.
சாணக்கியரின் கூற்றுப்படி அதிகாரத்தைப் பிடிக்க எவரையும் பயன்படுத்தலாம் என்பது அரசியலுக்குப் பொருந்தலாம். ஆனால், அறநெறி கொண்ட ஒரு சமூகத்திற்கு அது அழகல்ல. பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பமும் தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடத் தயாராகி வருவது, நீதிக்கான போராட்டம் இன்னும் முடியவில்லை என்பதையே காட்டுகிறது.
குற்றவாளியைக் காக்கும் சட்ட நுணுக்கங்கள்
“பதவி முக்கியம் என்றால் எத்தகைய மோசமான வனையும் துணைக்கு வைத்துக்கொள்” என்ற அதிகாரப் போக்கு ஜனநாயகத்தின் மாண்பைச் சிதைக்கும் என்பதற்கு உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கே சாட்சி!
ஒருபுறம் பெண்களின் பாதுகாப்பு குறித்த முழக்கங்கள், மறுபுறம் குற்றவாளியைக் காக்கும் சட்ட நுணுக்கங்கள் என இந்த விவகாரம் பல முகங்களைக் கொண்டுள்ளது.
குல்தீப் சிங் செங்கார் மீதான வழக்கில் முக்கியமாக விவாதிக்கப்படுவது அய்.பி.சி. (IPC) பிரிவு 376(2)(b) மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் பிரிவு 5(c) ஆகும்.
இந்த பிரிவுகள் ஒரு அரசு ஊழியர் (Public Servant) தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தால் அவர்களுக்குக் கடுமையான தண்டனை (ஆயுள் தண்டனை வரை) வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
குற்றவாளியின் வாதம்
செங்கார் தரப்பு வழக்குரைஞர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வேண்டுமானால் ‘பொது ஊழியராக’ இருக்கலாம். ஆனால், போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் ‘சாதாரண குடிமக்களே’ என்று வாதிட்டனர்.
விளைவு
சாதாரண குடிமகனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகள் மட்டுமே. செங்கார் ஏற்கனவே 7 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறையில் இருந்ததையே அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் ஒரு காரணமாகக் காட்டியது.
சி.பி.அய். மற்றும் பா.ஜ.க. அரசின்
முரண்பட்ட நிலைப்பாடு
பாதிக்கப்பட்ட பெண் செங்கார் மீது கூடுதல் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என முறையிட்டபோது, மத்திய புலனாய்வு அமைப்பு செங்காருக்கு ஆதரவாக நடந்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒரு நபரை ஒரு ‘சாதாரண மனிதனாக’ சித்தரித்து, அவருக்கு 7 ஆண்டு தண்டனையே போதும் என்ற ரீதியில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது, அரசின் இரட்டை நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
“பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்” (பெண் குழந்தைகளைக் காப்போம்) என்ற முழக்கம், சொந்தக் கட்சிப் பிரமுகர் குற்றவாளியாகும்போது வலுவிழந்து போவதையே இது காட்டுகிறது.
‘சட்டம் – ஒழுங்கு’ குறித்துப் பேசும்
அரசுக்கு ஒரு கரும்புள்ளி
இந்த வழக்கு வெறும் பாலியல் வன்கொடுமையோடு நின்றுவிடவில்லை. அதிகார பலம் எப்படி சட்டத்தை வளைக்கும் என்பதற்கு இதன் பின்னணி ஒரு உதாரணம்:
சாட்சிகள் மிரட்டப்பட்டதும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவானதும் ‘சட்டம் – ஒழுங்கு’ குறித்துப் பேசும் அரசுக்கு ஒரு கரும்புள்ளி.
டில்லி உயர்நீதிமன்றம் செங்காருக்கு பிணை வழங்கியபோது, “நீதிமன்றம் தனது விருப்பப்படி முடிவெடுக்கலாம் (Judicial Discretion)” என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயாரின் பாதுகாப்பு தற்போது சிஆர்பிஎஃப் (CRPF) வசம் இருந்தாலும், ஒரு கொடூரக் குற்றவாளி பிணையில் வெளியே வருவது சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
அரசியல் லாபத்திற்காக குற்றவாளிகளைத் தற்காப்பதும், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவர்களுக்குச் சலுகை வழங்குவதும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைத் தகர்க்கும். சாணக்கியரின் தந்திரங்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற உதவலாம். ஆனால், ஒரு நாட்டின் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்காது. பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தை நாடவிருப்பது, இந்தியாவில் ‘நீதி’ என்பது எளியவர்களுக்குத் தற்போதும் ஒரு நீண்ட போராட்டமாகவே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
குல்தீப் செங்காருக்கு ஆதரவாக டில்லி வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வர இயலாத நிலையில் உள்ளார்.
அவருக்கு சிறையும், வீடும் ஒன்றுதான். சிறையில் அவருக்கு ராஜ மரியாதை தான். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்குரைஞர் முகமது பர்ச்சா கூறும் போது இது மூச்சு விடச் சிரமப்படும் அந்தப் பெண்ணிற்கு தற்காலிமாக மூச்சுவிடக் கிடைத்த ஒரு குறுகிய கால ஆறுதலே இந்த தீர்ப்பு என்றார்.
இந்து பெண்ணை இந்து சட்டமன்ற உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். நீதிகேட்டுச் சென்ற தந்தை, அத்தை, பெரியம்மா, வழக்குரைஞர் என அனைவரையும் கொலை செய்து அதற்கு உறுதுணையாக உ.பி. சாமியார் அரசு இருந்தது.
இப்போது அவரை விடுவிக்க சட்ட ஓட்டைகளையும் பயன்படுத்துகிறது. ஆனால், அவருக்கு வாதாட முகமது பர்ச்சா என்ற இஸ்லாமிய வழக்குரைஞர் தனியாகப் போராடுகிறார். ஆம், ஓட்டுமொத்த மாநில, ஒன்றிய அரசுகள் மட்டுமல்ல, பல்வேறு இந்து சில்லரை அமைப்புகளின் கடுமையான கோபத்தையும் எதிர்கொண்டுதான் போராட்டுகிறார்.
