நமது வாழ்வியல் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தாண்டில் – இதற்குமுன் எப்படி இருந்திருந்தாலும் இவ்வாண்டு முதலேகூட நாம் ஒவ்வொரு நாளும் நம்மை ஒருபடி மேலே உயர்த்திக் கொள்ள நமது அன்றாட வாழ்க்கைப் பயணத்தில், சில குறிப்பிட்ட மாற்றங்களையாவது புகுத்தி வளர்ச்சி– முன்னேற்றம் – மகிழ்ச்சிப் பாதையில் பீடு நடைபோட முயற்சிக்க வேண்டாமா?
விண்வெளிப் பயணமும் வேகமாக நாளும் விரிவடைந்து வருகின்ற கால கட்டம் அல்லவா இன்றைய கால கட்டம்?
ஏஅய் (AI) என்ற செயற்கை நுண்ணறிவின், அதே வேக வளர்ச்சிக்கு நாம் ஈடு கொடுக்க முன்வந்து, அதற்கேற்ப, வாழ்நாள் முழுவதும் ‘கற்க கசடற’ என்பதை விதியாக்கி, நாளும் புதிய புதிய கருத்தாக்கங்களைக் கற்பதோடு,செயல் வடிவத்திலும் நாம் பயனடைய வேண்டும் அல்லவா?
இன்றேல் நாம் ‘‘படித்த – பட்டம் பெற்றத் தற்குறிகளே!’’
காலத்தின் வேகமும், முன்னேற்றமும் கடும் வேகம்.
‘‘24 மணிதான் நாள் ஒன்றுக்கு!’’ என்ற விதிமுறையும் மாற்றப்பட்டு, இனி நாள் ஒன்றுக்கு 25 மணி நேரம் என்று மாறும் நிலைக்கு உலகம் வந்துகொண்டுள்ளது.
ஏற்கெனவே பலர் ‘நாளும் 25 மணி நேரம்’ என்றே கருதி, ஒய்வின்றி உழைத்து அதன் அறுவடையில் மகிழ்ச்சி அடைகின்ற நிலையில், அதிகாரப் பூர்வமாகவே 25 மணி தான் நாள் ஒன்றுக்கு என்பதுஉழைத்து மகிழ்வோருக்கு – அறிவை விரிவு செய்து அகண்டமாக்க நிச்சயம் உதவும் என்பதுஉறுதி!
‘வைகறையில் துயிலெழு’ என்பதில் வைகறை இலக்கு, பலருக்கும் பல மாதிரி பொருள் கொள்ளும் நடைமுறையைத் தரக் கூடும்.
ஒரு மணி நேரம் – முன்னர் வழமையிலிருந்து மாறி, புதிதாக ஒரு செயலாக்கமாக 6 மணிக்கு எழும் பழக்கமுடையோர் 5 மணிக்கே எழுவதை உருவாக்கிக் கொண்டால் நல்லது… இல்லையா?
ஆனால் தூக்க நேரத்தை நமது வயதுக்கு ஏற்ப – முதுமை அடைந்த முதியவர்கள் குறைத்துக் கொள்வது நன்று – 8 மணி நேரம் விரும்பத்தக்கதல்ல.
முன்னே உண்டு, சிறு நடைப்பழக்கம், சிறிதுநேரம் புத்தகம் படித்து விட்டு படுக்கைக்குச் செல்லும் பழக்கம் சிறந்த தென்பது மருத்துவர்களின் அறிவுரை.
இரவு உறங்கப் போகுமுன் பல் துலக்கும் பழக்கம் உடல் நலக் கண்ணோட்டத்தில் மிகச் சிறப்பானது!
காலை எழுந்து பல் துலக்கும் பழக்கத்தைவிட இரவு உறங்குமுன் பல் துலக்குவது மிகவும் பயனளிக்கும் என்று பலரும் அறிவுறுத்துகின்றனர்.
இது இதயத்தைப் பாதுகாக்கப் பயன்படுகிறது என்பதும் சில மருத்துவ அறிஞர்களின் அனுபவ அறிவுரையாகும்!
படுக்கைக்குப் போகும்முன்பு, தொலைக்காட்சித் தொடர் அல்லது பல்வேறு உதவாக்கரை – காட்சிகளைக் கண்டு படுக்கைக்குச் செல்லுவது விரும்பத்தக்க பழக்கமாகாது.
இரவு படுக்கைக்குச் சென்று உறங்குமுன் விடுபட்ட நமது சில முக்கியப் பணிகள் விரைந்து செயல்பட வேண்டிய வினையாற்றல்கள் – இவற்றைப் பற்றி நினைவு கொள்ள அருகில் சிறு குறிப்பேடு – சிறியளவில் பாக்கெட் புக் – படுக்கை அருகில் எழுதுகோலுடன் எப்போதும் தயார் நிலையில் இருப்பது முக்கியம்.
வெளியே வரும்போதும் நமது பையில் இதுபோன்ற ஒரு ‘பையேடு’ (பையில் வைப்பதால் பைஏடு என்றுஅழைக்கிறேன்) வைத்து நினைவுகள் வரும்போது– தயக்கமின்றி உடனே குறித்துப் பிறகு காலை வேளையில் அதற்குச் செயல் வடிவம் தரலாமே!
இவையெல்லாம் சின்ன,சின்ன, செய்திகள் தான்! என்றாலும் வாழ்வின் வெற்றிக்கு இன்றியமையானவையாகும்.
(வளரும்)
