குற்றவாளியைக் காப்பாற்ற வரிசைக் கட்டி நிற்கும் பிஜேபி அரசு

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காரை விடுவிக்க, உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்ட  நகர்வுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு, வேலை கேட்டு வந்த சிறுமியைத் தனது இல்லத்தில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குல்தீப் சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து நீதிகேட்டுப் போராடிய அந்தச் சிறுமியின் குடும்பத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் நாட்டையே உலுக்கின.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்திலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

சிறுமியின் சிற்றன்னை, அத்தை மற்றும் அவரது வழக்குரைஞர் சென்ற கார் மீது லாரி மோதியதில் அத்தை, வழக்குரைஞர் மற்றும் சிற்றன்னை உயிரிழந்தனர். சிறுமியும் பலத்த காயமடைந்தார்.

இரண்டு ஆண்டுகள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்த அச்சிறுமி, தற்போது நிரந்தர மாற்றுத்திறனாளியாக வாழ்ந்து வருகிறார்.

குல்தீப் சிங் செங்கார் சிறையில் இருந்தபோது, அவருக்குச் சிறைத்துறை சார்பில் மசாஜ் செய்யவும், மது விருந்துகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றமே சிறைத்துறையைக் கடுமையாகக் கண்டித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு “மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின்” கீழ் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்படும். சாதாரண நபராக இருந்தால் 7 ஆண்டுகள் தண்டனை போதுமானது.

இந்தச் சட்ட ஓட்டையைப் பயன்படுத்திய உத்தரப் பிரதேச அரசு, டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதில், “குல்தீப் சிங் செங்கார் ஒரு மக்கள் பிரதிநிதியோ அல்லது சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபரோ அல்ல; அவர் ஒரு சாதாரண நபர் மட்டுமே” என்று குறிப்பிட்டது. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு, அவர் ஏற்ெகனவே 7 ஆண்டுகளைச் சிறையில் கழித்து விட்டதால், அவரை விடுதலை செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டில்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்குரைஞர் முகமது பார்ச்சா இது குறித்துக் கூறுகையில்:

“பாஜக அரசு குற்றவாளியைக் காப்பாற்றச் சட்டத்தின் அனைத்து ஓட்டைகளையும் தேடிப் பிடிக்கிறது. ஒரு மக்கள் பிரதிநிதியைச் சாதாரண நபர் என்று கூறி விடுவிக்க முயல்வது இந்த நாட்டிற்கே அவமானம்! தற்போது உச்சநீதிமன்றம் இந்த விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது எங்களின் போராட்டத்திற்கு ஒரு சிறு நம்பிக்கை அளிக்கிறது,” என்றார்.

தற்போது உச்சநீதிமன்றத்தின் தடையால் செங்கார் மீண்டும் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

பிஜேபி ஆட்சி என்றால் ‘ஏதோ பத்தரை மாற்றுத் தங்கம் போல்’, பேசும் வாய்களை மூடச் செய்யும் அளவுக்கு – உத்தரப்பிரதேச அரசு பிஜேபி பிரமுகரைக் காப்பாற்ற சட்டத்தின் சந்துப் பொந்துகளை எல்லாம் தேடி அலைகிறது.

பாலியல் வன்கொடுமை கொலை குற்றங்களில் எல்லாம் ஈடுபட்ட பிஜேபி பிரமுகரை சிறைத் தண்டனையிலிருந்து காப்பாற்ற ஓர் அரசே முனைப்புக் காட்டுகிறது என்றால், பிஜேபியின் நேர்மையற்ற தன்மை எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதே!

‘மனுதர்ம சாஸ்திர’த்தை அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று கூறிய கோல்வால்கரின் சீடர்கள் அல்லவா! அத்தகு ஆட்சியில் உண்மைக்கும், நேர்மைக்கும், நீதிக்கும் எங்கே இடம் இருக்க முடியும்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *