சென்னை, ஜன.2 கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட் ஸ்கேன் (பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன்) கட்டமைப்பை மூன்று மாதங் களுக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் அதற்கான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு அனுமதியும், அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதல் நடவடிக்கைகளும் முன்னெ டுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், காஞ்சிபுரம் மாவட்டம் காரப் பேட்டை அறிஞர் அண்ணா புற்றுநோய் மய்யத்திலும் பெட் ஸ்கேன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, திருச்சி, விழுப்புரம், திருவள்ளூர் மருத்துவமனைகளில் புதிதாக பெட் ஸ்கேன் வசதி தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
பெட் ஸ்கேன் வசதி
அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திருவள்ளூர் மருத்துவ மனையில் அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்த இயலாது என தெரிய வந்தது. அதேவேளையில், திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் லினாக் எனப்படும் அதிநவீன புற்றுநோய் கதிர் வீச்சு சாதனமும், சிகிச்சை கட்டமைப்பும் வர உள்ளதால் அங்கு பெட் ஸ்கேன் வசதி ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக இயக்குநர் அரசுக்கு சில பரிந்துரைகளை முன்மொழிந்தார். அரசுக்கு கூடுதல் நிதி சுமையின்றி தனியார் பங்களிப்புடன் அந்த பெட் ஸ்கேன் கட்டமைப்பை அமைக்கவும், ஏற்கெனவே உள்ள மருத்துவக் கட்டடங்களுக்கு இடையூறு இன்றியும், கூடுதலாக பணியாளர் தேவை இன்றியும் அதனை செயல்படுத்தவும் பரிந் துரைக்கப்பட்டது.
அதனை கவனமாக பரிசீலித்த அரசு, கிண்டி, திருப்பூர், திருச்சி, விழுப்புரத்தில் பெட் ஸ்கேன் மய்யங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் அதனைத் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத் துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
