சென்னை, ஜன.2 தமிழ்நாடு அரசில் பணியாற்றும் குரூப் ‘சி’, மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ்,குரூப் ‘சி’, ‘டி’ பிரிவு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், மேனாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் என மொத்தம் 9.90 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசில் பல்வேறு துறை களின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் ஒன்றிய அரசு அறிவிக்கும் அகவிலைப் படியை பின்பற்றி, அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது.
3 சதவீத ஊதிய உயர்வு
ஆண்டுதோறும் அக்டோபர் மாதத் தில் 3 சதவீதம் ஊதிய உயர்வும் அடிப் படை ஊதியத்துடன் இணைக்கப்படு கிறது.
இதுதவிர, ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பும் அனுமதிக்கப்படுகிறது. இதை மார்ச் மாதம் சரண்டர் செய்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணமாகப் பெற்று வந்தனர்.
கடந்த கரோனா காலகட்டத்தில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, இந்த ஆண்டு முதல், ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பெறும் வசதியை தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.
இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமின்றி, அரசு ஊழியர்களில் ‘சி’, ‘டி’ பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் போனஸ் ரூ.3,000 மற்றும்ரூ.1,000 என்ற வகையில் வழங்கப்படுகிறது.
விழாக்கால முன்பணம்
அதே நேரம், இதர பிரிவினருக்கு விழாக்கால முன்பணமாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது ரூ.20 ஆயிரமாக உயர்த் தப்பட்டுள்ளது. ‘சி’, ‘டி’ பிரிவினருக்கு வழங்கப்படும் பொங்கல் போனஸ் பிடித்தம் செய்யப்படாது. அதே நேரம், விழாக்கால முன்பணம், மாதா மாதம் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
இந்நிலையில், வரும் 15-ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் குரூப் ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.184 கோடிகளில்
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (1.1.12026) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய வகையில், பள்ளிக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை, வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி, அவர்களது ஆற்றலையும் அறிவையும் பெருக்க ‘நான் முதலமைச்சன்’ திட்டம் வரை, மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி, மாணவர்களுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் வரை துறை தோறும் பல முன்னோடி திட்டங்களை தீட்டி, எல்லார்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
நாடுபோற்றும் இத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க அயராது பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், தமிழர்திருநாளாம் பொங்கல் திருவிழாவை எழுச்சியோடு கொண்டாடி மகிழ 2024-2025-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பால், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் என மொத்தம் 9.90 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். இந்த உத்தரவின்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவை (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024-2025ஆம் நிதிஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறைச் செலவினத்தின்கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவை சார்ந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், மேனாள் கிராமஅலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகைதனி ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
