சென்னை, ஜன.2 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்தாண்டு டிட்வா புயல் கார ணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இருப்பி னும், இயல்பைவிட 3 சதவீதம் குறை வாகவே வடகிழக்கு பருவ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், லட்சத்தீவு – குமரிக் கடல் பகுதியில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், இலங்கைக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதால் நேற்றுமுதல் (1.12.2026) தமிழ்நாடு, புதுவையில் சில பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.
இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் கணித்து உள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் ஜன. 6 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
எனினும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும் வாய்ப்பு குறைவு என்றும், புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
