காரைக்குடி, ஜன.1 ‘‘பெரியார் செய்த புரட்சி! காலத்திற்கும் அழிக்க முடியாது!!’’ என்று காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறினார்.
காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று (31.12.2025) காரைக்குடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது ‘‘பெரியார் மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்படுகிறதே?’’ என்று ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து ப.சிதம்பரம் கூறியதாவது:
அதில் எல்லாம் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. பெரியார் ஏற்படுத்திய புரட்சி காலத்துக்கும் அழிக்க முடியாது. அவை சரித்திரப் புகழ் பெற்றவை.A
மேலும் ஒன்றிய அரசின் நித்தி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்திய மாநிலங்களில் வளர்ச்சியில் முதலிடம் தமிழ்நாடு தான் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தோடு ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏழைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த மகாத்மா காந்தியாரின் பெயரில் நூறு நாள் வேலைத்திட்டத்தை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்தது. இன்றைக்கு அந்தப் பெயரை மாற்றி வேறு ஒரு பெயரை வைத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அந்தப் பெயரை யாராலும் உச்சரிக்க கூட முடியாது. மத்திய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை ஒன்றிய அரசு தானே நியமிக்கிறது. அதேபோல மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை மாநில அரசு ஏன் நியமிக்க கூடாது? இது குறித்து ஆளுநரும், குடியரசுத் தலைவரும் பதில் கூறவில்லை. காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றுவது இயல்புதான்.
காரைக்குடியில் சட்டக்கல்லூரி, வேளாண் கல்லூரி திறப்பு விழாவிற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தமிழ்நாடு அரசு அறிவிக்கும். த.வெ.க. தலைவர் விஜய்க்கு எனது நல்வாழ்த்துகள். ஆனால், அவரது முயற்சி வெல்லாது.
வர இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் எங்கள் கூட்டணியே வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சட்டமன்ற உறுப்பினர் சா.மாங்குடி, மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, மாநகர தலைவர் மெ.சண்முகதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
