2025ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2026 ஆம் ஆண்டான புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்!
கசப்பான – மனித நேயத்திற்கும், பகுத்தறிவுக்கும், சமத்துவத்திற்கும், அமைதிக்கும் எதிரான எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடந்தேறியுள்ளன.
அறிவியல் வளர்ந்த அளவுக்கு அறப்பண்பும் சக மனிதனோடு, மனிதப் பண்போடு கைகோக்கும் சமத்துவ செயல்பாடுகளும் தான் மனிதன் என்பதற்கு அடையாளம்! அதைத் தொலைத்துவிட்டால், உருவத்தால் ஏதோ மனிதனாக நடமாடுகிறோம் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, உள்ளபடியான ‘மனிதம்’ என்ற இலக்கணத்திற்கு ஏற்றதாக வாழ்கிறோம் என்று ஏற்க முடியாது.
‘‘ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தும் பிறருக்கும் உண்டாகச் செய்வது தான் நாகரிகம். அதற்கேற்ற வகையில், நமது உழைப்புப் பயன்பட வேண்டும்’’ என்பார் மண் பொதுத் தந்தை பெரியார் அவர்கள்!
ஆனால் என்ன நடக்கிறது நாட்டில்? பிறப்பிலேயே உயர்வு – தாழ்வு, ஆண் எஜமானன்,பெண் அடிமை, பணக்காரன், ஏழை என்ற ஏற்றத் தாழ்வுகள் நிலவுவதும், இந்த நிலையை எப்படியாவது கட்டிக் காக்க வேண்டும் என்ற சிந்தனையும் தான் பெரும்பாலும் மனிதனை ஆட்டிப் படைக்கிறது.
அதனால்தான் ‘‘பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடமாகும்’’ என்றார் ஈரோட்டு ஏந்தல் தந்தை பெரியார்.
2025ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால் உலக நாடுகளிடையே எத்தனைப் போர்கள் – வல்லாண்மை உணர்வு! வன்மங்கள்!!
மதத்தின் பெயரால் குறிப்பாக இந்தியாவில் நடக்கும் அட்டூழியங்கள், சக மனிதனை மனிதனாகப் பார்க்காமல், அவன் எந்த மதத்துக்காரன், அவன் வழிபடும் இடம் எது, அது யாருக்குச் சொந்தம் என்பது போன்ற வெறுப்பை உமிழும் நடவடிக்கைகளைப் பார்க்கும் பொழுது, மனிதன் சிந்தனை எந்த அளவுக்குச் சீழ்பிடித்து சீரழிந்து கிடக்கிறது என்பதை உணர முடிகிறது.
இன்னொருவன் வீட்டில் என்ன நடக்கிறது? அவன் எதைச் சாப்பிடுகிறான்? என்று அயம்புலன்களையும் செலுத்திக் கண்காணிப்பதும், அதை வைத்து மல்லுக்கு நிற்பதும் மனிதத் தன்மையா?
உயிருக்குப் போராடும் ஒருமனிதனுக்குத் தானாக முன் வந்து கொடையாகக் கொடுக்க வேண்டிய குருதியை – கேவலம் மதம், ஜாதிகளை மய்யப்படுத்தி மண்டையை உடைத்து குருதியைக் குடிக்கும் கேவலத்தை என்ன சொல்ல!
‘‘புதியதோர் உலகு செய்வோம்! கெட்டப் போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்!’’ என்றாரே புரட்சிக் கவிஞர்!
சண்டை உலகத்தை சமாதானத் தென்றல் உலவும் பூமியாக மாற்றும் அறிவுக் கொடைகளைக் கொடுக்கும் தலைவர்கள் அவ்வப்பொழுது தோன்றியதுண்டு.
அத்தகைய தலைவர்களுள், சிந்தனையாளர்களுள் தந்தை பெரியாருக்குத் தகைமைசால் தனித்துவம் உண்டு!
மனிதன் சிந்தனையை மிருகமயமாக ஆக்கிக் கொண்டிருக்கும் சழக்குகளை வெளிப்படுத்தி, அவன் சிந்தனையை சீர்தூக்கும் சுத்திகரிப்புப் பணியைத் தந்தை பெரியார் மேற்கொண்ட பொழுது அவர் சந்தித்த எதிர்ப்புகள், கலவரங்கள் சொல்லி மாளாது!
ஆனாலும் காலந் தாழ்ந்தாலும் அவர்தம் சிந்தனைகள் – மண்டைச் சுரப்புகள் உலகத்தால் அடையாளம் காணப்பட்டு அரவணைப்பதற்கான அறிகுறிகள் அரும்ப ஆரம்பித்துள்ளன.
அதற்கான சான்று தான் 2025 செப்டம்பர் 4 அன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ்நாட்டின் – திராவிட மாடல் அரசின் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களால் தந்தை பெரியார் உருவப்படம் திறக்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.
‘என் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறு’ என்ற பெருமிதத்துடன் ‘‘Periyar’s Rationalist Idea is now resonate across the world’’ என்று பதிவு செய்தார்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் தந்தை பெரியார் உயர் எண்ணங்கள் குறித்து ஆய்வுக் கண்ணோட்டத்தில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன!
திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ‘‘பெரியார் உலகமயமாகிறார்! உலகம் பெரியார் மயம் ஆகி வருகிறது!’’ என்ற கருத்தைப் பறைசாற்றும் அளவில் மட்டுமல்லாது, செயல்படுத்தும் வினைகளில் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு வருகிறார்!
அதில் ஒரு முக்கியமான நிலை பெறும் நிர்மாணப்படுத்தும் செயல்பாடுதான் திருச்சியையடுத்த சிறுகனூரில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற ‘‘பெரியார் உலகம்’’ ஆகும்!
2026 புத்தாண்டுப் பிறக்கும் இந்நாளில் தேனினும் இனிக்கும் ஒரு தகவல், நம் இதயத்தை மகிழ்ச்சிக் கடலில் நீந்தச் செய்கிறது!
அதுவும் அந்த ஆக்ஸ்போர்டையும் சுற்றி மய்யங் கொண்டு இருக்கிறது.
Oxford Compact Tamil – Tamil – English Dictionary
(ஆக்ஸ்போர்டு காம்பேக்ட் தமிழ் – தமிழ் ஆங்கில அகராதி) வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டுப் பல்கலைக் கழக அச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த அகராதியில் பக்கம் 753 இல் ‘பெரியாரியம்’ என்பதற்குப் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
‘‘பார்ப்பனிய – வருணாசிரம எதிர்ப்பின் வழியாகச் சாதி எதிர்ப்பு, சமயத்தின் உற்பத்திப் பண்டமான ‘கடவுள்’ எதிர்ப்பு, கால, இடம் சார்ந்த ‘புனித’ எதிர்ப்பு என மனித சமத்துவத்துக்கு எதிரான எவ்வகைப்பட்ட ஆதிக்கக் கருத்தியலையும் எதிர்த்துச் செய்த போராட்டம் ஒரு முகம்; பழைய மரபான சாதியச் சட்டத்தை உடைத்துப் போடும் சமூகநீதி, சுயமரியாதை, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலியவற்றை முன்னிறுத்திய சமூக விடுதலைப் போராட்டம் ஒருமுகம் என இருபதாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் (ஈ.வெ. இராமசாமிப்) பெரியாரால் செயல் வடிவில் செய்து காட்டப்பட்டதொரு சிந்தனா முறை Periyarism (A Social Reform Movement)’’
– இது தான் பெரியாரியலுக்கு ஆக்ஸ்போர்டுப் பல்கலைக் கழகம் அச்சிட்ட அகராதி கூறும் விளக்கம்.
இந்த அகராதியைத் தொகுத்த பேராசிரியர்
வி. முருகன், ஆலோசகர் பேராசிரியர் பி. மருதநாயகம் ஆகியோர் பெரிதும் பாராட்டுக்குரியோர் ஆவார்கள்.
மண்டைச் சுரப்பை உலகம் ஏற்கத் தொடங்கி யுள்ளது. பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார்.
இந்த நல்லிணக்கச் சிந்தனையோடு 2026ஆம் ஆண்டை வரவேற்போம்!
வாழ்க பெரியார்!!
